தமிழ்நாடு இடைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி
தமிழ்நாடு சட்டசபை தொகுதிகளான திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது.
திருச்செந்தூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
வந்தவாசியிலும் 38,017 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது.
திருச்செந்தூரில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அம்மன் நாராயணன், தேமுதிக சார்பில் கோமதி கணேசன் உள்பட 25 பேர் போட்டியிட்டனர்.
இங்கு 79.17 சதவீத வாக்குகள் பதிவாயின. ஆண்களை விட பெண்கள் அதிகம் வாக்களித்திருந்தனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இங்கு பயன்படுத்தப்பட்ட 434 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் திருச்செந்தூர் ஆதித்தனர் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டன.
14 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தனக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அனிதா 75,223 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணன் 28,362 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கணேசன் வெறும் 4,186 வாக்குகளும் பெற்றனர்.
திருச்செந்தூர் தொகுதியை அதிமுகவிடமிருந்து திமுக பறித்துள்ளது. இங்கு தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது.
கடந்த தேர்தலில் வென்றதை விட இந்த முறை கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் அனிதா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் வெற்றி பெறுவது இது மூன்றாவது முறையாகும். 2001, 2006 ஆகிய தேர்தல்களில் இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். தற்போது நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பாக வென்றுள்ளார்.
இவர் திமுகவுக்குத் கட்சி தாவியதால்தான் இங்கு தேர்தலே நடந்தது.
வந்தவாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கமலக்கண்ணன், 38,017 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முனுசாமியை வீழ்த்தினார்.
செய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 78,827 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் முனுசாமி 40,810 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஜனார்த்தனம் 7,063 வாக்குகளும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் வந்தவாசி தொகுதியை திமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் ஜனார்தனன் கட்டுப்பணத்தை இழந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply