மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை: பா. அரியநேத்திரன்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பிபிசி தமிழோசையில் குற்றம் சுமத்தினார்.
இம்மாத நடுப்பபகுதியிலும் இந்த வாரத்திலும் இரண்டு தடவைகள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கும் அவர் இது தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தன்னால் கொண்டு வரப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
முதலாவது வெள்ளம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், இது வரை எந்தவொரு குடும்பத்திற்கும் நிவாரண உதவிகள் கிடைத்ததாக தான் கேள்விப்படவில்லை என பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் இது தொடர்பாக கேட்ட போது அனர்த்த நிவாரண அமைச்சிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கு நிதி உதவி கிடைத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply