கூட்டமைப்பைத் தொடர்ந்து இ.தொ.கா.; பிளவுறும் தமிழ் கட்சிகள்
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே முரண்பாடுகள் முற்றியுள்ளன. இந்த நிலையில், மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இ.தொ.கா.விலும் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான தமிழ் பேசும் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இது தொடர்பான இழுபறி நிலை பல வாரங்களாக நீடித்து வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார். அவருக்கு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா ஆதரவு வழங்குகிறார்.
அதே போல, ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களும் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா போன்றோருக்கு ஆதரவளிக்கலாம் என்று இரண்டுபட்டு நிற்கின்றனர்.
இந்த நிலையில், எத்தகைய முடிவை எடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு பக்க நிலைப்பாட்டுக்குள் பிரிந்து நிற்கப் போவது உறுதியாகியுள்ளது.
அதே வேளை, ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது அந்தக் கட்சிகுள்ளேயும் குழப்பங்கள் தோன்றியுள்ளன.
தற்போது இ.தொ.கா.வின் இரு முக்கிய தலைவர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜனும், பிரதிக் கல்வி அமைச்சர் சச்சிதானந்தனுமே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமது முடிவை நாளை நாளை புதன்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருப்பதாகவும், இதற்காக ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை இவர்கள் நடத்தவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மகிந்தவை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக இ.தொ.கா. தலைமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் யோகராஜன் மற்றும் சச்சிதானந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply