ஜனவரி 4ம் திகதிக்கு பின்பு கூட்டமைப்பு?
ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரா சம்பந்தன் குழு கூட்டமைப்பின் ஏனையோரின் பங்குபற்றல் அல்லது பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானங்களை ஏற்காது மக்கள் நலன் கருதி செயற்படப்போவதாக அறுதியாக கூறியுள்ளது.
திரு.சம்பந்தனின் வாதம்
மஹிந்த இராசபக்ஷவை அகற்றுவதே நோக்கம் என ஒன்று பட்டு நிற்கும் ஜே.வி.பி, யூ.என்.பி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு முன்னணிக்கு ஆதரவு அளிப்பதே சரியான வழி என வாதிடுகின்றார். மஹிந்தவுடன் அடிக்கடி பேச்சளவில் சம்பந்தன் பேசி வந்தாலும் ரணில் தரப்புடன் ஒத்து போவது என்பதனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இரகசியமாக முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன், ரணில் ஆகியோரை சந்தித்தபோது இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எந்த முடிவுகள் ஆயினும் மக்கள் மனம் அறிந்து அதற்கேற்ப நாசூக்காக வெளிவிடவேண்டும் இல்லையெனில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பது சம்பந்தனின் திட்டம். சம்பந்தன் அவர்களின் கருத்துக்கு ஆதரவாக 07 பேரும் அதற்கு எதிராக 13 பேரும் உள்ளனர். ஏனைய இருவரும் எந்த அணியிலும் இல்லாமல் உள்ளனர்.இந்த நிலையிலேயே கூட்டமைப்பு கூடவுள்ளது.
சம்பந்தன் அவர்கள் பலதடவை சரத்பொன்சேகா, ரணில் ஆகியோரை சந்தித்து இருக்கின்றார். சந்தித்த பின்னர் ரணில் அணியுடன் பேச்சு சுமுகமாக இருந்ததாகவும், முன்னேற்றகரமானதாக இருந்ததாகவும் அறிக்கை விட்டுள்ளார். ஆனால் அவருடன் சென்ற முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசியபோது அவர்கள் கூறுவது என்னவெனில் 2002 இல் சொன்னது போலவே இப்பவும் சொல்கின்றார்கள் என கூறுகின்றனர்.
அதாவது இதுவரை ரணில் , பொன்சேகாவுடன் நடந்த பேச்சுக்களில் அவர்கள் கூறியவை என்னவெனில் பேச்சளவில் மக்கள் பாவம் அவர்களின் பிரச்சினை தீர்க்கவேண்டும், போராளிகளை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அதன்படி செய்யவேண்டும், இராணுவ வலயங்களை எடுப்பது படிப்படியாக யோசிக்கலாம், அரசியல் தீர்வு பற்றி கூடி கதைக்கலாம் என்றே கூறியுள்ளனர்.
முடிவாக எதனையுமே இப்பொது வெளிப்படையாக சொல்ல முடியாது, எழுத்து மூலமாக தரமுடியாது என்று கூறிவிட்டனர். இதே போன்று தான் கடந்த காலங்களிலும் ரணில் சளாப்பியது அனைவரும் அறிந்தவிடயம். அதாவது அடி மனதில் தாம் வெல்லவேண்டும் என்ற எண்ணமே ரணிலுக்கு உள்ளதேதவிர வேறெந்த எண்ணமும் இல்லை. இது சம்பந்தன் அவர்களுக்கும் நன்கு தெரியும். அவரே தனது வாயால் இதனை கூறி இருக்கின்றார்.
மஹிந்த வெற்றி பெற்றால் எங்கள் நிலை கஸ்டம் நாம் பாராளுமன்ற தேர்தலில் நிற்கமுடியாது, ஒழுங்காக நடமாடவே முடியாது தவிர மேலும் மஹிந்தவின் அட்டகாசம் அதிகரிக்கும் என்பதே சம்பந்தன் வாதம்.
ஆனால் மஹிந்த வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளது. மஹிந்த வெற்றிபெற்றால் விடுதலைப்புலிகள் காலத்தில் செயற்படுவது போல செயற்படமுடியாது. வடக்கு கிழக்கு மக்களுக்கு எதனையாவது தெளிக்கவேண்டும். இல்லாவிடில் இந்தியாவின் அழுத்தம் அத்துடன் அடுத்த பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றிற்கு முகம் கொடுப்பதில் சிக்கல் என்பது மஹிந்தவுக்கு தெரியும்.
அதே வேளை மஹிந்த வெற்றிபெற்றால் மஹிந்தவுக்கு தொல்லை கொடுத்து மஹிந்தவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சர்வதேசம் அதற்கான திட்டங்களை நகர்த்துகின்றது. ( தமிழ் மக்கள் நன்மைக்காக அல்ல) . ஆனால் சம்பந்தன் அணி என்ன விதப்பட்டும் ரணிலுடன் சேர்ந்தால் தாங்கள் சுதந்திரமாக பேசி கதைக்கவாவது முடியும் என வாதிடுகின்றார். வாதிடுவது மட்டும் அல்ல செய்ற்பாட்டிலும் இறங்கியுள்ளார். குறிப்பாக வீரகேசரி, உதயன் போன்ற பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை அதற்கேற்ப தயார்படுத்தல், வெளி நாட்டு தமிழர்களில் ஒரு பகுதியினரை அழைத்து பிரச்சாரம் மட்டும் நிதி திரட்டலில் ஈடுபடுத்தல் ஆகியனவற்றில் ஈடுபடுகின்றார்.
புலம்பெயர் மக்களும் திரு.சம்பந்தனும்
கனடா, இலண்டன் ஆகிய நாடுகளில் சம்பந்தனின் கருத்தை ஏந்தியவாறு சில விடுதலை செயற்பாட்டாளர்கள் தமது வேலைட்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது கலந்துரையாடலில் மக்களுக்கு சில நம்பிக்கைகளையும் வழங்கிவருகின்றனர். அதாவது ரணில் சில எழுத்து மூலமான முடிவுகளை வழங்கியுள்ளதாகவும். அதே நேரம் ரணில் மூன்றாம் தரப்புடன் ஓப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முயல்வதாகவும் நம்பிக்கை துழிகளை மக்களிற்கு காட்டி சம்பந்தனுக்காக ஆதரவினை திரட்டுகின்றனர். நிதியும் வழங்கி வருகின்றனர்.
இதற்கு ரணில் பொன்சேகா அணியினரின் வெளி நாட்டு தொடர்புகளும் காரணம். ரணிலின் தொடர்பாளர்கள் கனடா மற்றும் அவுஸ்ரேலியா , இலண்டன் , நோர்வே ஆகிய நாடுகளில் உள்ள சில செயற்பாட்டாளர்கள், ஊடகங்கள் ஆகியோரின் உதவியுடன் தாம் எதனையுமே செய்ய தயாராக இருக்கின்றோம் ஆனால் மஹிந்தவை வீழ்த்தும் வரை எதனையும் செய்ய முடியாது என குழைந்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட நாடுகளில் உள்ள இந்த செயற்பாட்டாளர்கள் ரணிலை கடவுளாக்கி சம்பந்தனை கருப்பொருளாக்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களிற்குள்ளும் இந்த கருத்து மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது மஹிந்தவை அகற்ற வேண்டும் என்றால் ஓரளவாவது ஏற்று கொள்ளலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு சரத் பொன்சேகா வந்தால் எதனையாவது செய்ய முடியும் என மக்களை ஏமாற்றுவதில் புலம்பெயர் மக்களில் கணிசமானோருக்கு உடன்பாடு கிடையாது. காரணம்
1 சரத் பொன்சேகா தமிழ் மக்கள் வாக்கு போட்டாலும் வெல்வார் என்பதில் ஐய்யம், மிக கடினம்
அதாவது சரத்பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் முக்கியமாக மஹிந்த எதிர்ப்பு பிரச்சாரம், இதனையே காலம் காலமாக இரு கட்சிகளும் சொல்வதால் வாக்கு வங்கிகளில் பெரிதாக ஒன்றும் மாற்றம் வரப்போவதில்லை. அத்துடன் சரத்பொன்சேகா ஜனனாயகம், ஊடக சுதந்திரம், ஊழல் ஒழிப்பு என கூறுகின்றார். ஆனால் 70 வீதம் கிராம புற வாக்குகளை கொண்ட மக்களுக்கு இதுபற்றி யோசிக்கவோ அல்லது சிந்தித்திக்கவோ சந்தர்ப்பம், அறிவு இல்லை.
சிங்கள மக்களை கவரும் சில விடயங்களாக தான் புலிகளை அழித்த ஒரு வீரன் எனவும் அத்துடன் தான் வந்தால் சம்பள உயர்வு வழங்குவேன் எனவும் கூறியுள்ளதே.
ஆனால் மஹிந்த அணி இதனை முறியடிக்க பல திட்டங்களை முன்வைத்துள்ளது. ஆகவே சிங்கள மக்களின் வாக்குகளில் மாற்றத்தினை ஏற்படுத்துவது மிக கடினம். இதே வேளை எதிரணிக்கு முக்கிய பலம் ஜே.வி.பி ஆனால் ஜே.வி.பி யும் முன்னைய தேர்தலில் சந்திரிக்காவுடன் சேர்ந்து இனவாதம் பேசியதால் ரணில் மீதுள்ள கோபத்தில் ஜே.வி.பி இனருக்கு வாக்களித்தனர். இதனால் 32 ஆசனங்களை பெற்றனர். ஆனால் அதன்பின்னர் வந்த இடைதேர்தல்களில் ஜே.வி.பி தனது 75 வீதமான வாக்குகளை இழந்திருந்தது.
மேலும் இப்போ இனவாதம் பேசினாலும் அந்த கருத்து சிங்கள மக்கள் மத்தியில் எடுபடபோவதில்லை. காரணம் சிங்களவர்களை பொறுத்தவரை புலிகள் ஒழிந்துவிட்டார்கள் ஆகவே இனி ஒரு தாக்குதல் இடம்பெறும் வரை புலி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிதாக எடுபடாது. அடுத்ததாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் பெரிதளவில் மாறுபடாது அதாவது கடந்த தேர்தலிலும் ரணிலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே வாக்குவங்கிகளை கொள்ளையடிக்க கூடிய எந்த உருப்படியான திட்டங்களும் ரணில் அணியில் இல்லை. ஆகவே வெற்றிபெறுவதும் சந்தேகம்.
2 சரத்பொன்சேகா வந்தால் எதனை செய்ய முடியும்?
ஒன்றுமே செய்ய முடியாது காரணம் சரத் பொன்சேகா வந்தாலும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவதில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு சார்பாக என்ன தீர்மானங்கள் எடுத்தாலும் அது எதிரணியினரை பாராளுமன்ற தேர்தலை பாதிப்பிற்குள்ளாக்கும் என்பதனால் சரத்பொன்சேகாவோ அல்லது ரணில் விக்கிரம சிங்கவோ அதனையும் துணிந்து செயற்படுத்த போவதில்லை.
ஏனெனில் கடந்த தேர்தல்களில் சிங்கள மக்கள் ரணில் கூட்டணியினை தூக்கி எறிந்தமை இவர்களால் மறக்கமுடியாது. ஆகவே எதனை செய்யவேண்டுமாயினும் பாராளுமன்றத்தில் ஆக குறைந்த பெரும்பான்மை இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, அபிவிருத்தி, அவசரகால சட்டம், ஆகியவற்றை குறிப்பிடலாம். அரசியல் திட்டம்பற்றி நிகழ்ச்சி நிரலில் கூட வராது என்பது வேறு விடையம்.
ஆகவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடில் அதனை கலைக்கவேண்டும் அதற்கும் 06 மாதங்கள் எடுக்கும். சரி பாராளுமன்றில் எதிரணியினர் வெற்றி பெறுவார்களா? ஜனாதிபதியாக வந்ததும் சரத்பொன்சேகா ஜே.வி.பி ஒரு அணியாக தம்மை பலப்படுத்தும் நடவடிகையில் ஈடுபட, யூ.என்.பி இன்னொரு பக்கமாக இழுபறி பட்டாலும் சில பொது விடயங்களில் ஒன்று படுவார்கள். ஒன்று பட்டு வெற்றி பெறுவார்கள் ஆனால் வெற்றி பெற்ற பின்னர். வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது அது தொடர்பான பிரச்சினைகள் வரும் போது பிரிந்து செல்வார்கள்.
ஆகவே சரத்பொன்சேகாவோ அல்லது ரணில் கூட்டணியோ எதனையும் செய்ய முடியாது ஆனால் இழுத்தடிப்பு செய்து இன்னும் இன்னும் எத்தனை தமிழர்களை உள்வாங்குவதன் மூலம் தமிழர்களது இருக்கின்ற வாழ்வாதாரத்தினையும் ஆசை காட்டி மோசம் செய்து இல்லாது செய்வதே ரணிலின் நோக்கமாக இருக்கும். இந்த விடயத்தில் ரணில் கைதேர்ந்தவர்.
2002 இல் எழுத்து மூலமான ஒப்பந்தத்தில் இருக்கின்ற சில விடயங்களை கூட செய்யமுன்வராதவர் ரணில். அதாவது சிரான் எனும் அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது என கூறி அதற்கென ஒரு குழுவினையும் விட்டு விட்டு மறு பக்கத்தில் நிதியாளர்களை அழைத்து தமக்கே முழு நிதியும் தரவேண்டும் என கூறியவர் ரணில். சிறான் திட்டத்திற்கு அரச தரப்பில் நியமிக்கவேண்டியவர்களை நியமிக்காமல் இழுத்தடிப்பு செய்தவர் ரணில் இதற்கு ஓர் அரசாங்க அதிபரின் அதிகாரமே போதுமானது.
இதே வேளை நோர்வேயில் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி வடக்கு கிழக்கிற்கு அரசாங்கமும், சர்வதேசமும், புலிகளும் சேர்ந்து திட்டத்தினை தயாரித்து அதன்படி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கு ஓம் என்று கூறிவிட்டு பின்னர் அரசாங்க அதிபர்கள் ஊடாக (Nation building, Regaining Sri Lanka எனும் திட்டங்களை தீட்டி புலிகளுக்கு தெரியாமல் சர்வதேசத்திடம் கொடுத்து நிதியினை பெற்றவர்.
ஆகவே தான் அந்த காலத்தில் செய்ய கூடிய ஆக குறைந்த அரச அதிபர் அதிகாரங்களையே செய்ய முடியாமல் போன ரணில் அந்த இயலாமைக்காக சந்திரிகாவை குற்றம் சாட்டி இறுதியில் தோல்வி கண்ட ரணில் இப்போதும் அதனையே செய்வார். சரத்பொன்சேகா வென்றதும் பின்னர் தமிழர்களுக்கு சொல்லுவார் பாராளுமன்றத்திலும் வென்றால்தான் நாம் எதனையும் செய்யலாம் என்பார்கள். அதன் பின்னர் பாராளுமன்றில் தமது ஏனைய ஆதரவு கட்சிகளின் ஒத்துழைப்புடனேயே எதனையும் செய்யமுடியும் என கூறுவார் ரணில். இவ்வாறு ஏமாற்றப்பட்டுகொண்டிருப்போர் நாங்களாக இருக்க சிங்களம் தனது வேலைகளை செய்யும். ஆகவே இவர்களை ஏன் நாம் மக்களுக்கு சிபார்சு செய்யவேண்டும் ? இவ்வாறு கூறுகின்றனர் சம்பந்தன் அவர்களுக்கு எதிரான அணியினர்
விடுதலை ஆதரவு செயற்பாட்டாளர் அல்லது அமைப்புக்களும் ஜனாதிபதி வேட்பாளர்களும்
இதே வேளை மே மாதத்திற்கு முன்பு புலிகளின் ஆதரவு அமைப்புக்களாக இருந்த சில அமைப்புக்கள், செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மஹிந்தவின் கட்சியின் உறுப்பினர்களும் வெளி நாடுகளில் தமக்கு ஆதரவு தருமாறு புலம்பெயர் மக்களிடம் கூறுமாறு தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. இதில் எதிரணி வேட்பாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சிலர் ரணில் குழுவினருக்கு வாக்குறுதியும் வழங்கியதாக தகவல்.
4ம் திகதி கூட்டத்தில் கூட்டமைப்பினை உடைக்க கூடாது என்ற நோக்கில் சில விடுதலை ஆதரவாளர்கள் சமரசம் செய்யும் நோக்கில் கிளம்பி இருக்கின்றனர். சிங்கள ஏகாதிபத்தியம் எப்படியாவது இந்த ஜனாதிபதி தேர்தலை வைத்து கூட்டமைப்பை சின்னாபின்னப்படுத்தி அதனூடாக பாராளுமன்ற தேர்தலில் ஆளாளுக்கு ஏற்ப இரு சிங்கள பெரும் கட்சிகளும் கூட்டமைப்பினை விழுங்குவதே நோக்கம். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலிற்குள் சென்று சிக்குப்படாமல் மக்களிற்கு இரண்டு பேரினவாத கட்சிகளின் நோக்கம் செயற்பாடுகளை தெளிவாக எடுத்துக்கூறி மக்களையே முடிவெடுக்க விடுவதே சிறந்த வழி என கருதுகின்றனர். மாறாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாரையாவது ஆதரிக்கபோனால் இருக்கின்ற ஒரேயொரு தமிழர் பிரதினித்துவம் என்ற நாமமே இல்லாமல் போய்விடும். என்பதே சமரசம் செய்ய புறப்பட்டவர்களின் கருத்து.
தற்போதைய நிலையில் மக்கள் வாக்களிக்கும் நிலை என்ன?
யாழ் குடா நாட்டை பொறுத்தவரை 50 விழுக்காடு மக்கள் விரும்பியும் வாக்களிக்கும் நிலையில் இல்லை ( அடையாள அட்டை பிரச்சினை, உள் நாட்டு வெளி நாட்டு இடம்பெயர்வு). இருக்கின்ற 50 விழுக்காட்டில் 20 விழுக்காடு டக்ளஸ், மஹிந்த கூட்டணியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிகுதி 30 விழுக்காடு வீடு வீடாக அல்லது கடும் முயற்சிகளை மேற்கொண்டால் மாத்திரமே வாக்களிப்பார்கள்.
வவுனியா மாவட்டத்தில்40 விழுக்காடு அக்கறை இன்மையாலும் இடம்பெயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வாக்களிக்க மாட்டார்கள் மிகுதி 60 விழுக்காட்டில் சித்தார்த்தன், மற்றும் அரச கூட்டணிகள் 25 விழுக்காடு. ஏனைய 35 வீத மக்கள் இயக்க ஆதரவு தமிழர் பிரதி நிதிகள் ஏதாவது சொன்னால் கேட்பார்கள். இதே வேளை வன்னியில் 20,000 குறைவான வாக்காளர்களே வாக்களிப்பார்கள் தரவுகளின் படி. மன்னார் மாவட்டத்தில் இதே நிலமை அதாவது நகரத்தில் இருக்கின்ற மக்களே வாக்களிக்கும் நிலையில் உள்ளனர். ஏனையோர் வாகன வசதி, உணவு வசதிகள் செய்தால்தான் வந்து வாக்களிப்பார்கள் இது வரலாறு. இதே வேளை ஆயர் அவர்களின் கருத்தையும், ரெலோ இயக்கத்தின் கருத்தையும் கேட்கும் நிலையில் 40 விழுக்காடு மக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த வேட்பாளர்களையும் மக்களிற்கு சிபார்சு செய்யும் நிலையில் இல்லை.
கிழக்கு மாகாணத்திலும்சிங்கள முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளில் 60 விழுக்காட்டினை ஆழும் கட்சிக்கே போடும் நிலை காணப்படுகின்றது. இதே வேளை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை யார் பறிமுதல் செய்வது என்பதில் அங்கு தமிழர்களுக்கு இடையே போட்டி. இதனால் விரக்தியுற்ற 50 விழுக்காடு மக்கள் ஜனாதிபஹ்டி தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்பதே கணிப்பீடு.
இதே வேளை இந்த நேரத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு பகுதிக்கு சென்று ஊர் ஊராக, வீடு வீடாக தமது முடிவுகளை தெளிவு படுத்தும் நிலையில் இல்லை. ஆகவே இந்த நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் நினைத்தால் சரத்பொன்சேகாவை வெல்ல வைக்க முடியும் என்பதில் அல்லது மஹிந்தவை வீட்டிற்கு அனுப்ப முடியும் என்பதில் நியாய பூர்வமான கருத்துக்கள் இல்லை.
கத்தோலிக்க சமூகத்தின் கருத்துக்களை பார்க்கையில் யாழ்ப்பாணம் – மக்களே முடிவு எடுக்கட்டும், மன்னார்- ஆட்சி மாற்றம், மட்டகளப்பு திருகோணமலை – அமைதியினை கடைப்பிடிப்போம் ஆர் வந்தாலும் கதைச்சு பேசி செய்வோம்.
ஆகவே இந்த குழப்பமான நிலையில் தேவை இல்லாமல் யாரையாவது ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி கூட்டமைப்பு முடிவு எடுப்பதோ அல்லது கூட்டமைப்பினை வலியுறுத்துவதோ தேவையற்ற தொன்று. முடிந்தால் இரு வேட்பாளரும் என்ன சொல்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எதனை செய்ய முடியும் அல்லது முடியாது என்பதனை மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும்.மக்களே முடிவு எடுக்கட்டும். பராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் ஒன்றாக்கி குளப்பியடிக்க தேவை இல்லை. என்பதே பொதுவான கருத்து.
ஆனால் கூட்டமைப்பு இந்த மாதம் 4ம் திகதி கூட்டப்படப்போகின்ற கூட்டத்தில் இருபெரும் அணிகளாக கருத்துக்கள் முன்வைக்கப்படவுள்ளன அதாவது சரத்பொன்சேகாவை ஆதரித்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவருதல் என ஒரு அணியும். மஹிந்தவை அகற்ற சரத்பொன்சேகாவை ஆதரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு தெளிவு படுத்தினால் மக்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் ஆகவே வெளிப்படையாக எதனையும் மக்களுக்கு திணிக்க தேவை இல்லை என இரண்டாவது அணியும் விவாதித்து முடிவு செய்யவுள்ளனர்.
இந்த விவாதம் உடைவினை ஏற்படுத்த கூடாது என்பதில் புலம்பெயர் மக்கள் பெருமளவானோர் கருதுகின்றனர்.
(ஜனாதிபதி தேர்தல் – 2010 குறித்து தமிழ் சமூகத்தினுள் இருக்கும் பன்முகப்பட்ட கருத்துருவங்களுக்கு ஒரு களமாக ஈழநாதம் வெளியிட்ட இவ் அரசியல் கட்டுரையை இங்கு மீள்பிரசுரம் செய்துள்ளோம் – ரெலோ நியூஸ்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply