கூட்டமைப்பு நாளை சந்திப்பு; ஸ்ரீகாந்தா சிவாஜி அழைக்கப்படவில்லை?

 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராயவரோதயம் சம்பந்தன் தலைமையில் நாளை கொழும்பில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் என். ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் பல சுற்று சந்திப்புகள் இடம்பெற்ற பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை கூடவிருக்கின்றது.

நாளைய கூட்டத்தில் இச்சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதோடு இது பற்றி தலைவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிய வருகின்றது.

இருப்பினும் நளைய கூட்டத்திலும் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கக் கூடிய வாயப்புகள் இருக்காது போல் தெரிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதே வேளை தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், அவருக்கு எதிராக தமது கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருப்பது குறித்து ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தரை சந்தித்து தெளிவு படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply