வெளிநாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தாயகம் திரும்ப வேண்டும்
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், தாய் நாட்டுக்கு திரும்பி வந்து பணியாற்ற வேண்டும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். அறிவியல் ஆய்வில் அரசியல் தலையீடு நீக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். 97வது இந்திய அறிவியல் மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. 7ம் தேதி வரை மாநாடு நடக்கிறது. 5,600 விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
சேர். சி. வி. ராமன் காலத்தில் இருந்தே இந்திய அறிவியலில் சில துறைகளில் பின்னடைவு ஏற்பட்டு விட்டது. சிறந்த பணிகள் சிலவற்றை பாராட்டாமலும், அங்கீகரிக்காமலும் இருந்து விட்டோம். இதற்கு சிவப்பு நாடா முறையும், அரசியல் தலையீடும் காரணமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்தும் சலுகை காட்டும் போக்கில் இருந்தும் அறிவியல் விடுபட வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் சிவப்பு நாடா முறையில் இருந்தும், அரசியல் குறுக்கீட்டில் இருந்தும் பெருமளவில் விடுபட வேண்டும் என்று 2009ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் கூறியதை நான் கவனத்தில் கொண்டுள்ளேன்.
விஞ்ஞானம், தொழில்நுட்பத்துக்கு புதிய ஊக்கமளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள பல்கலைக்கழகங்களிலும், அறிவியல் கூடங்களிலும் அவர்கள் கொஞ்ச காலமாவது பணியாற்ற வேண்டும். இதன் மூலம் கடந்த காலங்களில் அறிவு வடிகாலாகிக் கொண்டிருந்த நிலையை மாற்றி அறிவின் ஆதாயத்தை நாம் பெறலாம். விஞ்ஞானம் வளர்ச்சியடைய நிதித் தேவையை பூர்த்தி செய்வது மட்டும் போதாது. நமது மூத்த கல்வியாளர்களின் மனநிலையும், பல்கலைக்கழகங்களின் மனநிலையும் மாற வேண்டும். இந்திய அறிவியலை பிரச்னைகளில் இருந்து விடுவிக்க எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வருமாறு உங்களை அழைக்கிறேன்.
கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாநாட்டின் முடிவு யாருக்கும் திருப்தி தரவில்லை. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. எனினும் பசுமையக வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது. இந்த விஷயத்தில் இந்தியாவும் பின்தங்க கூடாது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகத் தலைவர்களுடன் சேர்ந்து நாமும் திட்டமிட வேண்டும். 2010-20ம் ஆண்டை புதுப்பித்தல் யுகமாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.
உறுதியான வளர்ச்சியை அடையாமல் நாம் சில உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் சிலவற்றை பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்க வேண்டும். விஞ்ஞான தொழில்நுட்பத்தில் பெண்களை கவரும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வாரியம் மார்ச்சில் செயல்படத் தொடங்கும். இந்த வாரியம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும். இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply