விடுதலை செய் அல்லது விசாரணை செய்; அரசியல் கைதிகள் போராட்டம்

விடுதலை செய் அல்லது விசாரணை செய் எனும் கோரிக்கையை முன் வைத்து கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 130 பேர் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் எனக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தப் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த முதலாம் திகதி முதல் செய்து வரும், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளரான கரவெட்டியைச் சேர்ந்த கனகசபை தேவதாசன் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இறுதியான போராட்டமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த குறித்த அரசியல் கைதி, `தண்ணீர்` கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

(கனகசபை தேவதாசன் தனது நிலைப்பாட்டை விளக்கி நீதி அமைச்சுக்கு 21, நவம்பர் 2009ல் அனுப்பிய கடிதம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. )

K Thevathasan
No: 9544, J/Ward
New Magazine Prison
Colombo- 09
21-11-2009

To:
The hon.Milinda Moragoda
The hon minister of Justice
Ministry Of Justice
Superior Courts Complex
Colombo-12

கெளரவ அமைச்சர் அவர்கள்,

க.தேவதாஸன் வயது 52 விளக்கமறியல் கைதி இல: 9544 “03-12-2009 முதல் சாகும் வரை உண்ணாவிரதம்”

கனகசபை தேவதாஸன் ஆகிய நான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச் சந்தேக நபராக கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன். எனது நிலைப்பாட்டை விரிவாக எழுதி 26-08-2009ல் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பினேன். சிறைச்சாலை நிர்வாகத்துக்கூடாக 12-11-2009ல் தங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினேன்.

“என்மீதான சட்டநடவடிக்கை தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்” என்பதே எனது கோரிக்கை. கடந்த யூலை மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல தடவைகள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டேன்.

கடைசித் தடவையாக நீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் 15-10-2009ல் ஆரம்பித்து 11 நாட்கள் தொடர்ந்து எனது உண்ணாவிரதத்தை 25-10-2009ல் நிறைவ செய்தேன். கெளரவ நீதி அமைச்சரான தங்களின் விசேட தகவலுடன் அன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்து என்னை சந்தித்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியை நம்பி உணவு உட்கொள்ள ஆரம்பித்தேன் ஆனால் எனது கோரிக்கை இம்முறையும் நீதித்துறையால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நீதித்தறை மீது எனக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்:

1.
08-09-2009, 16-09-2009, 30-09-2009 ஆகிய திகதிகளில் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிறையிலிருந்து சென்று வந்தேன். எனது கைதுடன் சம்பந்தப்பட்ட வேறு ஆட்களின் பெயர்களும் சந்தேக நபர்களாக அந் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் அங்கே சமூகமளிக்கவில்லை. நான் அழைக்கப்பட்டது ஏன் என்பது பற்றியோ சமூகமளிக்காத மற்றவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றியோ இன்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது. இதற்கு பின்னர் B 1927/2008 என்ற அதே வழக்கு இலக்கத்தில் 14-10-2009, 28-10-2009, 05-11-2009, 11-11-2009, 16-11-2009 ஆகிய திகதிகளில் வெலிக்கடை விசேட நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று வந்தேன் எனது பெயர் மட்டுமே இங்கு அழைக்கப்பட்டது. என்மீதான நீதி துறையின் நிலைப்பாடு என்ன என்று அறிய ஒவ்வொரு தடவையும் நான் கேள்வி எழுப்பிய போதிலும் இந்நீதிமன்றம் எனக்குப் பதில் தரவில்லை.

2.
B148/2008 என்ற ஒரு புதிய வழக்கு இலக்கத்தில் 04-11-2009, 18-11-2009 ஆகிய தினங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்று வந்தேன். இதில் என்னுடன் எவ்வகையிலும் சம்பந்தமேயில்லாத செல்லையா சரத்குமார் என்ற யாரோ ஒரு நபரின் பெயருடன் எனது பெயர் இணைக்கப்பட்டது ஏன்? இதைச் செய்தது யார்? எதற்காக இப்புதிய வழக்கு பதிவு செய்ய்பபட்டுள்ளது? இவை பற்றியும் இற்றைவரை எனக்கு எதுவுமே தெரியாது.

3.
2008யூன் மாதம் தொடக்கம் சுமார் 15 மாதகாலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைத்தேன். தமிழீழ விடுலைப்புலிகள் இயக்கத்துடனான எனது தொடர்பை ஒத்துக்கொண்டு 26-08-2009ல் கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தேன். எனக்கு எதிரான வழக்கில் நான் எதிர்த்து வழக்காடப் போவதில்லை என்றும் இவ்வாக்கு மூலத்தில் உறுதியளித்தேன். அப்படி இருந்தும் என்மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம் காட்டப்படுவதன் காரணம் என்ன? எனது தரப்பில் சட்டத்தரணியை நான் நியமிக்கப் போவதில்லை. அப்படியாயின் என் மீதான சட்ட நடவடிக்கை தொடர்பான நிலைவரத்தை நீதித்துறையிடமிருந்து நான் எவ்வாறு அறிவது? அல்லது அறியவே முடியாதா?

4.
கல்கிசை வெலிக்கடை மற்றும் கோட்டை நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் அவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இரு மொழிகளுக்கும் சம இடம் வழங்கும் வகையில் இலங்கையில் அரசியல் யாப்பில் 16வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசியல் யாப்பின் 24ம் 25ம் சரத்துகள் இம்மொழி உரிமையை உத்தரவாதம் செய்கின்றன. ஆனாலும் “சிங்களம் மட்டும்” என்பதே நடைமுறையாகவுள்ளது. எனது வழக்கு தொடர்பான நீதித்துறையின் ஆவணம் மற்றும் அறிவித்தல் யாவும் தமிழ்மொழியிலேயே தரப்படல் வேண்டும் எனக்கெதிரான வழக்கும் தமிழ்மொழியிலேயே நடைபெறவேண்டும். இது நடைபெறுமா? அல்லது இம்மொழி விவகாரம் என்மீதான சட்ட நடவடிக்கை மேலும் தாமதமாவதற்கு இன்னுமொரு காரணமாகிவிடுமா?

“சட்டம் என்பது கணத்திற்கு கணம் நிகழும் மனித மனமாற்றத்தை உணர்ந்து உள்வாங்கும் திறனற்றது. சித்தார்த்தன் கெளதம புத்தரானதைக் கிரகிக்கும் சக்தி சட்டத்திற்கு கிடையாது. இலங்கையின் இனவிவகாரத்தின் தோற்றுவாய் பற்றி அறிவதில் சட்டத்திற்கு என்ன? அக்கறை? பிரித்தாளும் கொள்கையே பிரிவினை உணர்வின் ஆதிமூலம் என்பதை சட்டம் எவ்வாறு அறியும்? இன்று என்னையும் என் போன்றவர்களையும் சட்ட விரோதிகளாக இனங்காண்பதைத் தவிர சட்டத்தால் வேறேன்ன செய்ய முடியும்?

சட்டத்தாலும் அதனைப் பிரயோகிக்கும் நீதித்துறையாலும் இதையெல்லாம் புரிந்துகொள்ள இயலாதபொழுது “இருப்பு! என்பதை விட “இறப்பு” பற்றிய சிந்தனையே என்னுள் மேலோங்கி நிற்கிறது. “03-12-2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதம்” மேற்கொள்வது என்ற முடிவுக்கு நான் வர இதுவே காரணம். எனது இம்முடிவு ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் நல்லதொரு பாடமாக அமையட்டும்.

இதன்பொழுது நான் இறக்க நேர்ந்தால் எனது சடலத்தை கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் கல்வித்தேவைக்காக அன்பளிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

இங்கனம்
க. தேவதாசன் (ஒப்பம்)
கனகசபை தேவதாசன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply