`மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு` எனும் தொனிப் பொருளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

வெளிநாட்டு தொழிலதிபர்களை மேலும் பணக்காரராக மாற்றாமல் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலேயே எனது பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கொள்கை விளக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெளியிட்டு வைத்தபோது தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு’ என்ற தொனிப் பொருளில் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இது தொடர்பான வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்கள், அமைச்சர்கள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்தொகை யான கட்சி ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பெளத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகிய மதத் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி இந்த விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்தார்.

வெற்றிபெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்கவும் அந்த சுதந்திரத்தை பெற மக்கள் செய்த அர்ப்பணிப்புகளை அர்த்தமுள்ளதாக்கவும் உள்ள விடயங்களை இந்த வெளியீட்டில் உள்ளடக்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனால் இந்த நாட்டு மக்களின் சுதந்திரத்தை எந்த வகையிலும் காட்டிக்கொடுக்கும் ஒரு எழுத்துக்கூட இந்த வெளியீட்டில் இல்லையென்பதை கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகிறேன்.

எமக்கு தேவைப்படுவது எவருக்கும் துரோகம் செய்யாத ஒரு சமூகமாகும். இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் இந்த தாய்நாடு சொந்தமானது. அவர்கள் வசிப்பதற்கு வேறு நாடுகள் இருப்பதாகக் கூறுவதைவிட்டு அவ்வாறு நினைக்கவும் எவருக்கேனும் உரிமை இல்லை.

அதே போன்று வடக்கில் மாகாண சபை தேர்தலை துரிதமாக நடத்தி முடித்து ஜனநாயகத்தை முழுமையாக ஸ்தாபிப்போம், ஜனநாயகத்தின் கீழ் செயற்படும் அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசி தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிவகைளை மேற்கொள்வோம்.

நண்பர்களே, இந்த யுகத்தில் தற்போது இனங்களுக்கிடையே மிகுந்த பிணைப்பு ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. மக்களிடையே நட்புணர்வு ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை நாம் கைவிட்டுவிட முடியாது.

தெற்கைப் போன்று வடக்கிலும், கிழக்கிலும் உள்ள மக்கள் எமது பொரு ளாதார கொள்கையை ஏற்றுக்கொண்டு ள்ளமையை நான் அறிவேன்.

வெளிநாட்டு தொழிலதிபர்களினதும், பொக்கெட்டுக்களையும் டொலர்களால் நிரப்பாமல் இலங்கை மக்களை மேம்பெறச் செய்யும் வகையிலேயே எனது பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலக வரைபடத்தில் பெறுமதியான இடத்திற்கு கொண்டுச் சென்றுள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த பெறுமதியை இலங்கையில் வாழும் உங்களுக்கு பெற்றுத் தருவதே எனது எதிர்பார்ப்புக்களாகும்.

எமக்கு இருந்த அனைத்து சவால்களையும் இன்று நாம் வெற்றிகொண்டுவிட்டோம். கெளரவமிக்க சமாதானத்தை தாய்நாட்டுக்கு கொண்டு வந்த அதே சமயம் கெளரவமான வாழ்க்கையையும் கொண்டுவர முடிந்திருக்கிறது. இன்று எமது விவசாயி குறைந்த விலையில் உரத்தை வாங்கிக் கூடிய விலையில் நெல்லை விற்கிறார். நாட்டு மக்களில் 20 பேரில் ஒருவர் அரச ஊழியராக இருக்கின்றார்.

இன்று இலங்கை வரை படத்தை வரைந்தால் அது புதிய வரைபடமாக இருக்கும். அன்று இருந்தது ஒரு துறைமுகம்தான். இன்று நாட்டில் ஐந்து துறைமுகங்கள் உள்ளன. எல்லைக் கிராமங்களாக அந்த வரை படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கிராமங்கள் இன்று இலங்கைப் படத்தில் இல்லை. கிராமப் பாதை கொங்கிரீட் பாதையாகியுள்ளது.

அதற்கிடையே அதிவேக நெடுஞ்சாலை, பாரிய மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை நிர்மாணிக்கப்படுகின்றன. மன்னார் கடலில் எண்ணெய் வளம் பற்றி ஆய்வு நடக்கிறது. இன்று வலவை, மொரகஹகந்த, சான்ஓயா, கும்புக்கன் ஓயா, தெதுருஓயா ஆகிய அனைத்து நீர் நிலைகளிலும் ஒரு சொட்டு நீர் கூட கடலுக்கு செல்ல விடாமல் தேவைக்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாம் விவசாயிக்கு வாவி, மீன் பிடிப்பவருக்கு துறைமுகம், தொழிலாளிக்கு தொழிற்சாலை ஆகிய அனைத்தையும் செய்து கொடுத்துள்ளோம்.

இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் புதிய துறைமுகம், விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை தேவைப்பட்டது. அதனால் அடுத்த தசாப்தம் நூறு வருடங்களுக்குப் போதுமான அபிவிருத்தி இந்த நாட்டில் ஏற்படும் தசாப்தமாகும்.

அப்படியானால் இப்போது நாம் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் மாற்றவேண்டியது இருப்பின் அது எவராவது ஒருவரின் பழிவாங்கல் உணர்வுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பது அல்ல.

கப்பல் சேவை, விமான சேவை, வர்த்தகம், மின்சாரம் மற்றும் அறிவு ஆகிய ஐந்து விடயங்களில் கேந்திர முக்கியத்துவம் பெற்ற இடமாக இலங்கையை உருவாக்க நாம் தயாராக வேண்டும். இலங்கையை ஆசியாவின் சிறப்பான நாடாக மாற்ற வேண்டும். அவ்வாறெனில் மக்கள் விட்டுச் செல்லும் நாடாக அல்லாமல் மக்கள் விரும்பி இந்த நாட்டை மாற்ற எம்மால் முடியும். எங்கள் இளைஞர்களுக்கு இதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உலகின் மோசமான பயங்கரவாதிகளை தோற்கடித்து உலகை வியப்புக்குள்ளாக்கியது எங்கள் நாட்டில், எங்கள் கிராமங்களிலேயே பிறந்த இளைஞர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

அதேபோல் பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம் இலங்கையை ஆசியாவின் சிறப்பு மிகுந்த நாடாக மாற்றுவதும் இளைஞர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படவேண்டும். எனவே தொழில்களை தேடிச் செல்லும் இளைய பரம்பரைக்கும் பதிலாக தொழில் இளைஞரை தேடி வரும் ஒரு நாடாக இதனை மாற்றுவோம்.

நாட்டுக்காக தம்மை அர்ப்பணிக்கும் நாட்டை நேசிக்கும் மக்களை பாதுகாக்க அவர்களுக்கு பெறுமதியான சமூகமொ ன்றினை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். அதேவேளை ஊனமுற்ற, இளைப்பாறிய, வறிய மக்களை பேணும் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

விண்ணையும் மண்ணையும் வெற்றி கொள்ளும் இணைய யுகத்தையும் வெற்றிகொள்ளும் அறிவுடன் கூடிய ஆசிரியர்களை, மாணவர்களை உருவாக்கவேண்டும். இலக்கியத்தில், மேடையில் நாம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். அழுதுகொண்டும், பிதற்றிக்கொண்டும் இருக்கும் சமூகத்துக்கு இனி முற்றுப்புள்ளி வைப்போம்.

உணவு, காணி, வீடு, வாசல் ஆகியவ ற்றுக்காக ஏங்கும்,மற்றும் ஏமாற்றப்படும் சமூகத்துக்கும் முடிவுகட்டுவோம். ஆறு வருடங்கள் முடிவுக்கு வரும்போது உணவு, உடை, வீடு, ஆகிய வாக்குறுதிகளை வழங்கும் யுகம் முடிவுக்கு வந்துவிடும். மின்சாரம், நீர், வீதியுடன் கூடிய, 6 இலட்சம் வீடுகள் கட்டப்படுவது அதற்காகத்தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நான் சொன்னதை செய்பவன். அதேபோல் செய்வதை சொல்பவன்.

எனது ஆட்சிக் காலம் நான்கு ஆண்டுகளான போதிலும் அதில் 8 மாதம் தவிர்ந்த மீதிக் காலம் முழுவதும் உலகில் மிகவும் மோசமான பயங்கர வாதிகளுக்கு எதிராக முகங்கொடுக்க நேர்ந்தது. காலையில் விழித்தெழும் போதே தாய்நாட்டை ஒற்றுமைப்படுத் துவதற்கு எதிராக உள்ள தடைகளை எப்படி வெற்றிகொள்வது என்பதை நினைவில் இருந்திக் கொண்டுதான் எழுவேன். எனவே நாட்டின் சில முனைகளில் போரிடும் காலம் எனக்கு போதாமல் இருந்தது.

எதிர்வரும் 27ஆம் திகதி முதல் எனது முழுக் காலமும் ஒரே நோக்கத்துக்காகவே செலவிடப்படும். ஊழல் இல்லாத செயல்மிகு நாட்டை கட்டியெழுப்புவது மற்றொரு பாரிய யுத்தம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஊழல் செய்வோருடன் சேர்த்து கொண்டு கத்தினால் மட்டும் இந்த நாட்டில் இருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க பிக்பாக்கட் காரனைப் போல் முடியாது பாதாள உலகினரை அழித்தது போல் புலி பயங்கரவாதத்தை ஒழித்தது போல் வேகமாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கையின் சரித்திரத்தில் எவருமே நினைத்திராத வகையில் நாம் சிந்திக்கிறோம். இந்த நாட்டை பலம் மிகுந்த ஐந்து அம்சங்களின் கேந்திரமாக மாற்றியமைத்து ஆசியாவில் உன்னத நாடாக இலங்கையை மாற்றுவோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

இனிமேல் நாம் வன்மத்துக்கு பதில் அன்பு அடக்குமுறைக்கு பதில் இணக்கப்பாடு பழிவாங்கலுக்கு பதில் வரவேற்பு ஒழித்தலுக்கு பதில் உருவாக்குதல் அறியாமைக்கு பதில் அறிவு கூர்மை மூலம் எங்கள் நாட்டை நாம் ஒளிபெறச் செய்வோம்.

* ஐங்கேந்திரங்களின் மையமாக ஆசியாவின் சுபீட்சமான நாடக மாற்றுதல்.

* உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றியமைத்தல்.

* வீடு, மின்சாரம், குடிநீர் மற்றும் தொடர்புசாதன வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் தேசம்.

* ஒழுக்கமானதும், சட்டத்தை மதிப்பதுமான சமூகம்.

* வெற்றி கொண்ட நாட்டை மீண்டும் பிரியாமல் கட்டிக் காப்பது.

* பெரும்பாலானோரின் இணக்கத்துடன் உருவாகும் நிரந்தர சமாதானம்.

* மரம் செடி கொடிகளையும் ஜீவராசிகளையும் காக்கும் பசுமை தேசம்.

* இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முதலிடம் சாதகமான தேசம்.

* விண்ணையும் மண்ணையும் இணைய வெளியால் வெற்றி கொள்ளும் ஆசிரிய மாணவர்கள் குழுவினர்.

* மேலைத்தேய, கீழைத்தேய மருத்துவத்தை இணையாக வெற்றி கொள்ளும் நோயற்ற மானிட சமூகம்.

* தேசிய வளங்கள் மற்றும் அறிவினைக் கொண்டு உலகை வெற்றிகொள்ளும் தேசிய தொழில் முயற்சியாளர்.

* இலக்கியத்துறையும் ஆற்றுகை கலைகளும் பிரவாகிக்கும் யுகம்.

* மனிதர்கள் விட்டுச் செல்லும் நாடாக அன்றி விரும்பி வரும் நாடாக்குதல்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


Both comments and pings are currently closed.

Comments are closed.