விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அடுத்த வாரம் விடுதலை; உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோருகிறார் சட்ட மாஅதிபர்

வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களும் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

எனவே தற்போது சிறைகளில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் தமது போராட்டத்தைக் கைவிடுமாறு சட்ட மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோருக்கே வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஏனைய அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் சட்ட மாஅதிபர் கூறினார்.

சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அடங்கலாக சுமார் 600 பேர் வரை விடுதலை செய்யப்படவுள்ளதாகக் கூறிய அவர், கைதிகளின் விடுதலை தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.

வழக்குகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக 11 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழு ஆராய்ந்து வருகின்றது.

இதன்படி மிகக் குறைவானோருக்கே வழக்குப் பதிவு அவசியமாகுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென சட்ட மாஅதிபர் கூறினார். நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 577 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு மகசீன், சீ.ஆர்.பீ, வெலிக்கடை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி ஆகிய சிறைச் சாலைகளில் கைதிகள் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இவர்களுள் சிலர் தளர்வடைந்ததாகவும் அவர்களை மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச் செய்தி தொடர்பான `ரெலோ நியூஸ்` முன்பு வெளியிட்ட செய்தியின் இணைப்பு வருமாறு; விடுதலை செய் அல்லது விசாரணை செய்; அரசியல் கைதிகள் போராட்டம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply