காணாமல் போனோரை மீட்டுத்தருவதாகக்கூறி யாழில் கப்பம் பெற்ற குழுவுடன் தொடர்புடைய பெண் வவுனியாவில் கைது

யாழ்ப்பாண மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாகக் கூறி கப்பம் பெற்ற குழுவுடன் தொடர்புடைய பெண் ஒருவரை யாழ். மாவட்ட விஷேட குற்ற விசாரணப்பிரிவு பொலிஸார் வவுனியாவில் வைத்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாகத் தெரிவித்து கிராம சேவையாளர்கள் ஊடாக தொலை பேசியில் தொடர்பை ஏற்படுத்தி பல இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாகப் பெற்றது தொடர்பில் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

மேற்படி முறைப்பாடு தொடர்பில் உடன் விசாரணை மேற்கொள்ளு மாறு யாழ். பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.அஜந்த சமரகோன், யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன ஆகியோர் இணைந்து யாழ். விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து யாழ்.விசேட குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸார் முறைப்பாட்டில் கிடைத்த தொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின்படி கப்பம் பெற்ற பணம் வவுனியா மக்கள் வங்கியில் வைப்புச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட இரு பொலிஸாரும் வவுனியாவுக்குச் சென்று மக்கள் வங்கியின் சம்பந்தப்பட்ட கணக்கு வைத் திருந்த பெண்ணை கடந்த மாதம் 30 ஆம் திகதி வவுனியா பூவரசன் குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 11 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.

இதில் பிரஸ்தாப பெண் 10 இலட்சம் ரூபாய் பணத்தை மீளப்பெற்றுள்ளார். வவுனியா பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் 3 பெண் பிள்ளைகளின் தாயாவார். கைது செய்யப்பட்ட பிரஸ்தாப பெண்ணை கடந்த 5ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் நீதிவான் அ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட நீதவான் பிரஸ்தாப பெண்ணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறி யலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அத்துடன் குற்றச்சாட்டப்பட்டவரின் வங்கிக் கணக்கை நிறுத்தி வைக்குமாறு வவுனியா மக்கள் வங்கி முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply