இந்தியாவிலிருந்து நாடு திருப்பியதும் கூட்டமைப்பின் அறிக்கை வருமாம்
இந்தியாவில் இருந்து தாம் கொழும்பு திரும்பிய பின்னர் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கும் வகையில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் வைத்து புதுடில்லிக்கு விமானம் ஏற முன்னர் யாழ். உதயன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் நால்வர் இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை சென்னை திரும்பிச் செல்வர் என்று கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் மாலையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று விடியற்காலையும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர். நேற்று முன்னிரவு சென்னையிலிருந்து அவர்கள் நால்வரும் புதுடில்லிக்கு விமானம் ஏறினர்.
இன்று புதுடில்லியில் இந்திய அரசுத் தலைவர்களையும் மூத்த அதிகாரிகளை யும் அவர்கள் சந்தித்து இலங்கைத் தமிழர் நிலைமை, தற்போதைய இலங்கையின் அரசியல் போக்கு ஆகியவை குறித்துப் பேசு வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுப் பின்னிரவில் அவர்கள் புதுடில்லியைச் சென்றடைந்ததும், இன்று அவர்கள் புதுடில்லியில் சந்திக்கும் அதிகாரிகள், பிரமுகர் பற்றிய விவரங்களும், நேர அட்டவணையும் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவர்களிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று புதுடில்லி வெளிவிவகார அமைச்சில் “சவுத் புளொக்” கில் பல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நாளை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பின்னர் அடுத்த நாள் சனிக்கிழமை அவர்கள் கொழும்புக்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply