தேர்தலின் பின் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளுக்குரிய வரையறைகளையும் வெளிக்கட்டமைப்பையும் முன்மொழிவேன்: ஜனாதிபதி
“நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தாராளமான பெரும்பான்மையுடன் நான் வெற்றி பெறுவது உறுதி. அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளுக்குரிய வரையறைகளையும் வெளிக்கட்டமைப்பையும் நானே முன்மொழிவேன்.’ இப்படித் தெரிவிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
நேற்று முன்தினம் அலரிமாளிகையில் தமிழ், ஆங்கில ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடிய சமயமே இந்த விடயத்தை அவர் வெளியிட்டார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
யுத்தம் முடிவுற்று இப்போதுதான் ஆறு, ஏழு மாதங்கள் பூர்த்தியாகின்றன. அதற்கிடையில் அவசரப்பட்டு உயர் பாது காப்பு வலயங்களை அகற்றமுடியாது. பாது காப்பு நிலைமைகளைக் கருத்தில் எடுத்து அதற்கேற்ப கெடுபிடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க முடியும். படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்.
உயர் பாதுகாப்பு வலயம் என்பது நாட்டின் மக்களின் பாதுகாப்புடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட விடயம். அதை அரசியல் நோக்கங்களுக்காக விட்டுக்கொடுக்க முடியாது. அந்த விடயத்தை வைத்து அரசியல் நடத்துவது நாட்டின் தலைவனுக்குப் பொருத்தமானது அல்ல. அதனால்தான் அரசியல் பற்றிய பேச்சுகளில் அதை ஓர் அம்சமாகச் சேர்த்துக்கொள்ள நான் தயாரில்லை என்பதைத் தமிழ்க் கூட்டமைப்புக்கும் தெரிவித்தேன். உயர் பாதுகாப்பு வலயம் என்ற நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட அம்சத்தை அரசியலாக்கி, அதில் அரசியல் லாபமீட்ட நான் முனைய மாட்டேன் என்று நான் தெளிவுபடுத்தியதால் சிலர் என் மீது கோபப்படுகின்றார்கள். மற்றப்பக்கம் போய் நிற்கின்றார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? தாராளமான பெரும்பான்மை வாக்குகளுடன் நான் இத் தேர்தலில் வெல்வேன். வென்ற பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
இதுவரை அரசியல் தீர்வுக்கான யோசனையை நீங்கள் (சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர்) கொண்டு வாருங்கள் என்று கூறினேன். இனிமேல் அப்படியல்ல. தேர்தலில் வென்ற பின்னர், அரசியல் தீர்வுக்கான வரையறை வெளிக்கட்டமைப்பு இதுதான் என்பதை நானே முன்மொழிவேன். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு தீர்வுக்கான இறுதி வடிவ யோசனைகளை அவர்கள் (ஏனைய தரப்புகள்) இணைந்து தயாரிக்க வேண்டியிருக்கும்.
அத்தகைய முயற்சிக்காகவே எனக்கு ஆணை வழங்கும்படி இந்தத் தேர்தல் மூலம் மக்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்கள் அதிகளவு பெரும்பான்மையுடன் அந்த ஆதரவைத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: நீங்கள் முன்மொழியப்போகும் தீர்வு யோசனை எத்தகையதாக இருக்கும்? வடக்கு கிழக்கு இணைப்பு அதில் உறுதிப்படுத்தப்படுமா?
ஜனாதிபதி: இணைப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. “பதின்மூன்று பிளஸ் ஒன்று” என்பதுதான் எனது திட்டம். மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்டதாக ஒரு மேல்சபை இருக்கும். அதன் காரணமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மீளப் பறிக்க முடியாத நிலைமை உறுதி செய்யப்படும்.
கேள்வி: அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கும் மேலதிகமாகச் செய்யப்போகின்றீர்கள் என்கிறீர்கள். அப்படியானால் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ளபடி பொலிஸ் கட்டமைப்பை வைத்திருக்கும் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுமா?
ஜனாதிபதி: இல்லை. அதைக் கொடுக்கவே முடியாது. அந்தத் திருத்தம் அந்தச் சமயத்தில் நிலவிய அரசியல் கட்டாயங்கள் கருதித் தயாரிக்கப்பட்டது. அதில் அத்தகைய தவறான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவை எடுத்துப் பாருங்கள் மாநிலங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டமையால் மத்திய அரசு கூட சில வேலைகளைச் செய்ய முடியாது திண்டாடுகின்றது. மத்தியில் இருக்கும் அரசின் மூத்த தலைவரான சோனியா காந்தி தனது குடும்பத்தின் மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்குச் செல்ல முடியாதிருக்கின்றார். அங்கே வந்தால் உங்களைக் கைது செய்வேன் என மிரட்டுகிறார் மாநில முதல்வர் மாயாவதி. மாநிலத்துக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியதால் வந்த வினை இது. ஆகவே அத்தகைய ஏற்பாட்டை நாங்கள் இங்கு செய்ய முடியாது. தமிழரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் போய்க் கேளுங்கள். மாகாண சபைகளுக்குப் பொலிஸ் அதிகாரங்களை வழங்கலாமா என்று. அவரும் கூட வேண்டாம், வேண்டாம் என்றுதான் கூறுவார்.
கேள்வி: அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்துவீர்களா? அதுவும் தாமதமாகின்றதே?
ஜனாதிபதி: அது எனது தவறு அல்ல. நாடாளுமன்றத்தின் தவறு. அவசர அவசரமாக அன்றைய அரசியல் தேவைகளுக்காக ஒரு சட்டத்தை உரிய தூர நோக்கு மற்றும் செயற்பாட்டு முறைமை இன்றி கொண்டு வந்ததால் ஏற்பட்டுள்ள பிரச்சினை இது.
சுதந்திரத் தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பை ஒரு கட்சிக்காரரிடம் ஐ.தே.க. பிரமுகரிடம் வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டதால்தான் அதை அங்கீகரிக்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மறுத்தார். அது சரியான தீர்மானம்.
அவசரப்பட்டு சட்டங்களைக் கண்மூடித்தனமாக நிறைவேற்றினால் இப்படித்தான் தடங்கல் வரும்.
கேள்வி: அப்படியானால் அதற்கு நீங்களும் பொறுப்பு அல்லவா? நீங்கள் தானே அந்தச் சட்டத்திருத்தத்தை அப்போது நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தவர்?
ஜனாதிபதி: ஆம். நான்தான் செய்தேன். எனது கட்சி அப்படி என்னைப் பணித்ததால் நான் அவ்வாறு செயற்பட்டேன். எப்போதுமே நான் கட்சிக்குக் கட்டுப்பட்டே வளர்ந்தேன். கடைசிவரை கட்சியுடனே நின்றேன்; நிற்பேன். வெளியே போகவில்லை. அதனால்தான் இன்று இந்தப் பதவிக்கு உயர்ந்தேன். இந்தப் பதவியை இலக்கு வைத்து நான் என்றும் காரியமாற்றியவன் அல்லன்.
இப்போது அரசியலுக்கு வரும் இளம் தலைமுறைக்கும் நான் அந்த ஆலோசனையையே வழங்கி வருகிறேன். குறுக்கு வழியில் முன்னேற முயற்சிக்காதீர்கள். உங்கள் உங்கள் கட்சியிலிருந்து கடுமையாக உழையுங்கள். மக்களுக்காகச் சேவை செய்யுங்கள். பதவியும் உயர்வு நிலையும் உங்களைத் தேடிவரும் என்று நான் அவர்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். பிற கட்சிகளிலிருந்து எமது கட்சிக்கு வர விரும்பிய பல இளைஞர்களை வரவேண்டாம் என நான் ஆலோசனை கூறித் தடுத்துள்ளேன். அவர்களின் கட்சியிலிருந்து இங்கு வந்து அவர்கள் மேலே உயர்வதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. எனவே அங்கிருந்து உயருங்கள் என நான் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் அடுத்தமுறை பதவிக்கு வந்தபின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றுவீர்களா? ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிக் குறைப்பீர்களா? எது, எப்படியோ தற்போதைய முறைமை தொடர்ந்தால், இப்போது நீங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் கூட , இன்னும் ஆறு வருடங்களுக்கு மட்டுமே சிலர் அதை ஏழு வருடங்கள் என்கிறார்கள் நீங்கள் அதிகாரத்தில் இருக்க முடியும். அதன் பின்னர் அதிகாரத்தில் நீடிக்க என்ன செய்வீர்கள்?
ஜனாதிபதி: ஏன் ஆறு அல்லது ஏழு வருடங்கள் என்கிறீர்கள்? சிலர் எட்டு வருடங்கள் என்கிறார்கள். அதைப்பற்றி உரிய சட்ட ஆலோசனையைப் பெற்று அப்போது நாம் முடிவு செய்யலாம். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீடிப்பதோ, ஒழிப்பதோ ஜனாதிபதியின் கைகளில் இல்லை. அப்படி யாரும் கூறுவார்களாயின் அது முற்றிலும் தவறு. அந்தப் பொறுப்பு நாடாளுமன்றத்தினுடையது. நாடாளுமன்றம்தான் ஆட்சிமுறையை மாற்றத் தீர்மானித்தால் அதற்கமைவாக அரசமைப்பை மாற்றமுடியும். இது விடயத்தில் நான் தனித்து ஒரு தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் கருதுவீர்களானால் அது தப்பு. எது, எப்படியோ இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நாங்கள் அரசமைப்பைத் திருத்தவேண்டியிருக்கும். அல்லது மாற்ற வேண்டியிருக்கும். அப்படியெல்லாம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இருபங்கு எம்.பிக்களின் ஆதரவு அவசியம். அதுமட்டுமல்ல, சில சமயம் கருத்துக்கணிப்பு மூலம் மக்கள் அனுமதியையும் கூட அதற்கு நாம் பெறவேண்டி நேரலாம். அத்தகைய அரசமைப்பு மாற்றங்களின் போது கூட ஆட்சிக் கட்டமைப்பு முறை மாற்றம் குறித்து நாம் பார்க்கலாம்.
கேள்வி: உங்கள் அடுத்த ஆட்சியில் உங்களின் வெளிநாட்டுக் கொள்கைகள் எப்படி அமையும்? நீங்கள் ஈரான், சீனா போன்ற நாடுகளுடன் அதிகம் அணி சேருகின்றீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே……. அதை நீங்கள் தொடர்வீர்களா……?
ஜனாதிபதி: எமது ஒரே கொள்கை அணிசாராக் கொள்கைதான். அதைத்தான் எமது மூத்த தலைவர்களான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றோர் கடைப்பிடித்தனர். நானும் அதையே கைக்கொள்கிறேன். இடையில் இருந்தோர் குறித்து (சந்திரிகா) நான் எதுவும் குறிப்பிடவிரும்பவில்லை.
ஈரானுக்கும் எமது நாட்டுக்கும் இடையிலான நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அவர்கள் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் செப்பனிட்டு, சீர்செய்து தந்தனர். எமக்கு வட்டியில்லாக் கடன் அடிப்படையில் ஏழு மாத நிலுவையுடன் எரிபொருளை அவர்கள் விநியோகிக்கின்றனர். இப்படி வட்டியின்றி ஏழு மாதக் கடனுக்கு எண்ணெய் தருபவர்களால் எமது நாட்டுக்குப் பெரும் உதவி. அத்தகைய தரப்பை நான் எப்படிக் கைவிட்டுத் தள்ளி நிற்க முடியும்?
கேள்வி: பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் இப்போது சரத் பொன்சேகா பக்கம் உள்ளன. நீங்கள் வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்துக்கு வந்ததும் இந்தத் தமிழ்க் கட்சிகளை உங்கள் பக்கம் அணைத்துக் கொள்வீர்களா?
ஜனாதிபதி: உங்கள் பதில் தப்பு. பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் எங்கள் பக்கம்தான் உள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தனின் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) அணி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்றன எம்முடனேயே உள்ளன. தமிழ்க் கூட்டமைப்பிலும் கணிசமான தொகையினர் என்பக்கம் உள்ளனர். இப்போது தமிழ்க் கூட்டமைப்பு உடைந்துவிடக்கூடாது, அதற்கான அபவாதம் தம் மீது விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களில் பலர் அக்கட்சியை விட்டு நீங்க முடியாது அதனுடன் உள்ளனர். அவர்கள் எல்லோரும் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் எமது பக்கம் வந்து விடுவர்.
கேள்வி: அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய உண்ணாவிரதம் தொடர்கின்றது. இவ்விடயத்தில் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதி: நானும் ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கிறேன். உண்ணாவிரதங்கள் இருந்திருக்கிறேன். போராட்டம் பண்ணியிருக்கிறேன். நீண்ட நடைப் போராட்டம், மக்கள் சேர்ந்து சத்தமிட்டு ஆட்சேபனையைத் தெரிவிக்கும் “ஜனகோஷா” போன்ற பல்வேறு நிகழ்வுகளில் நானும் ஈடுபட்டிருக்கிறேன். இவற்றினுள் புதையுண்டு கிடக்கும் சூட்சுமங்கள் நான் அறிந்ததே.
அவர்கள் உண்மையில் உண்ணாவிரதம்தான் இருக்கின்றார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், இந்த விடயத்தை ஓரிரு நாளில் தீர்த்து விடமுடியாது. இதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் விவகாரமாக ஆராய்கின்றார்கள். குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாதோர் விடுவிக்கப்படுவர். ஆனால் அதற்காக எமக்குக் காலவரையறை வகுத்து நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலை அரசியல் விவகாரத்துக்குரிய விடயமாக விவாதமாக மாற்றவில்லை. மாறாக, கீழ்த்தரமான மூன்றாம் தரமான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் விடயமாக மாற்றியிருக்கின்றார்கள். இங்கும் கூட அரசியல் வர்க்க வேறுபாடுதான் காரணம். நான் கிராமத்திலிருந்து வந்தவன். அதைக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். பாரம்பரியமான பணக்கார வம்சாவளியில் வந்த சிறப்பு எனக்கு இல்லை.அதனால் என்மீது குற்றம் சுமத்தும் எதிரணித் தலைவர்கள் நான் சாப்பாட்டுக்கடை வாங்கினேன், மருந்துக்கடைச் சொத்தைக் குவித்தேன் என சின்னச்சின்ன விடயங்களைக் கூறி குற்றம் சுமத்துகின்றனர். வெளிநாடுகளில் மாடமாளிகைகளை வாங்கிக் குவித்துள்ளேன் என்று குற்றம் சுமத்தினால் நானும் அந்த மேல்மட்ட வர்க்கத்தினரில் ஒருவனாகி விடுவேன், அதற்கு இடமளிக்கக்கூடாது என்பது அவர்கள் எண்ணம். இப்படி அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதில் கூட வர்க்கபேதத்தை அவர்கள் கைவிடவில்லை என்றார் ஜனாதிபதி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply