மஹிந்த ராஜபக்ஷ கட்டுப்பணத்தினையும் இழக்க நேரிடும்: சரத் பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் கூட இழக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நுவரெலியா நகரில் இன்று 17 ம் திகதி இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

எமது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் எனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளனர். 10 வீதத்தை மர்ததிரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் இழக்க நேரிடும்.எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிகள் என்னை ஆதரிக்க முன்வந்துள்ளன.

நான் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டில் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவேன். அத்துடன் என்னால் வழங்கப்பட்ட சகல வாக்குறுதிளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது போல் சம்பளவுயர்வினை வழங்குவேன். அரச சேவையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி கௌரவத்துக்குரியதொன்றாக அத்துடன் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தனியார் பயணிகள் சேவையை நடத்துகின்றவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மானியமுறை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளேன். அத்துடன் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்றவர்களுக்கும் உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்று இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தினை ஏற்படுத்துவேன்.

ஆகவே அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து இந்த நாட்டில் வாழுகின்ற சகல மக்களும் ஒரே குடையின் கீழ் அணிதிரள்வோம். இந்த நாட்டில் வாழுகின்ற தோட்டத்தொழிலாளர் சமூகம் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை எனது வெற்றியின் மூலம் நிலை நிறுத்துவேன்.

நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்,

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிம், மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் சதாசிவம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லச்சாமி, அர்ச்சுன ரணதுங்க, ஜெயலத் ஜெயவர்தன, இராமலிங்கம் சந்திரசேகரன், சச்சிதானந்தன், மத்தியாகாணசபை உறுப்பினர் உதயகுமார், கே.கே.பியதாச உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply