அரசு, ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் இருப்பின் நிரூபித்து காட்டுங்கள்

அரசுக்கு அல்லது ஜனாதிபதிக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை நிரூபித்துக் காட்டுமாறு ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இவ்வாறு சவால் விடுத்தார்.

இந்த நாட்டில் அதிக அளவில் ஊழல் இடம்பெற்றிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக கோப் அறிக்கை மூலம் முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தப்பட்டு விட்டதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா அங்கு கூறினார்.

ஊழல் மோசடி இடம்பெற்று ள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது இந்த நாட்டின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு உள்ளுட்ட தகவல்கள் மற்றும் அபிவிருத்தி ஆவணங்கள் ஆகியவற்றின் விபரங்களையேயாகும். எதிர்க்கட்சியினர் கூறுவது போல் நிதி செலவிடப்பட்டிருந்தால் தற்போது 1000 டாலர்களாக இருந்த தனி நபர் வருமானம் நூறு சதவீதம் அதிகரித்து 2000 டாலர்களாக இப்போது அதிகரித்திருப்பது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பினார்.

உலகில் உணவுத் தட்டுப்பாடு இருந்து வந்த நிலையில், உலக பொருளாதாரம் சரிவடைந்திருந்த நிலையில் நாட்டின் அபிவிருத்தி வேகம் 5 சதவீதம் என்ற நிலையில் பேணப்படுவதற்கு அரசாங்கத்தால் முடிந்திருக்கிறது. ஊழல் மோசடி இடம்பெறுவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அப்படியானால் இந்த அபிவிருத்தி வேகத்தை அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்து பேண முடியும்?

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரொருவரின் உறவினரொருவரால் மேற்கொள்ளப்பட்ட `வட்` (VAT) வரி மோசடி பற்றியும் அரச நிறுவனங்கள் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதும் நாடறிந்த விடயமாகும்.

அவ்வாறு விற்கப்பட்ட காப்புறுதி கூட்டுத்தாபனம் நீதிமன்ற உத்தரவினால் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற் கப்பட்டது. கொழும்பு மரைன் நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகத்துக்கு சொந்தமான காணியொன்று குறைந்த விலைக்கு விற்கப்பட்டதும் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் தான் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பாக இப்போது தகவல் கிடைத்து வருகின்றது. அவ்விடயம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.

நாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டை விடுத்தால் அதனை நிரூபிக்கும் திறமை இருக்க வேண்டும். இல்லாமல் போலி பிரசாரம் செய்து மக்கள் மனதை தமது பக்கம் திசை திருப்ப எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கப் போவதில்லை.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி.யுடன் கூட்டு வைத்திருந்தாலும் அந்த இரண்டு கட்சிகளினதும் கொள்கைகள் மாறுப்பட்டவையாகும்.

ஆனால் இவை இரண்டும் இன்று சம்பந்தன் குழுவினருடன் சேர்ந்துள்ளன. புலி ஆதரவாளர் மனோ கணேசன், ஹக்கீம் ஆகியோரும் அங்குதான் உள்ளனர்.

மங்கள, ரணில், ஹக்கீம், மனோ ஆகிய எதிர்பார்ப்புகள் இழந்து போனவர்கள் மீண்டும் பதவிக்கு வர எதிர்பார்க்கின்றனர். இவர்களுடன் சேர்ந்துள்ள சரத் பொன்சேகாவுக்கும் அதே நிலைமைதான் ஏற்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply