விஸ்வநாதன் உருத்திரகுமாரன் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும்
தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்பந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும்.
சிந்தனை ஒன்று
ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதலில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று சம்மந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் இன்னொரு வரி மிக முக்கியமானது. முதலில் நாம் யதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்பதாகும்.
யதார்த்தம் என்றால் எது ? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதுதான். அப்படியென்றால் யதார்த்தமற்ற சிந்தனை என்று அவர் எதைச் சொல்கிறார் ?
தமிழீழ தனியரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் இரண்டும் சம்பந்தன் பார்வையில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவையே என்ற கருத்து அவரால் முன் வைக்கப்பட்டுள்ளதா? உருத்திரகுமாரன் இது குறித்து தனது கருத்தை வெளிப்படையாகக் கூற வேண்டிய பருவம் வந்துள்ளது.
இதுவரை வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றியோ, அல்லது எல்லை கடந்த தமிழீழ அரசு பற்றியோ கூட்டமைப்பு வெளிப்படையான கருத்து எதையும் கூறியிருக்கவில்லை. இந்த நிலையில் யதார்த்தத்தை புரிய வேண்டும் என்ற புத்திமதி யாருக்கு என்று கேட்பது புலம் பெயர் நாடுகளில் உள்ளோருக்கு அவசியம்.
சிந்தனை இரண்டு
கூட்டமைப்பு எதைக் கூறுகிறது என்பதைவிட என்ன செய்கிறது என்பதே முக்கியம். கூட்டமைப்பு இந்தியாவில் இருந்து வந்ததும் சிவாஜிலிங்கம், சிறீகாந்தா இருவரும் டெலோவில் இருந்து விலத்தப்பட்டுள்ளார்கள்.
கூட்டமைப்பை இரண்டாக பிரித்து ஒரு பிரிவு மகிந்தவையும், மறு பிரிவு சரத்தையும் ஆதரிக்கும்படியாக புலிகளே செய்துள்ளார்கள் என்ற கருத்தை கூட்டமைப்பு இந்திய அதிகாரிகளிடம் நிராகரித்திருக்கலாம். மேலும் அதைச் செயலில் காட்டுவதற்காக இந்த வெளியேற்றங்களை அவசரமாக அறிவித்திருக்கலாம் என்பதை உணர முடிகிறது. இந்தியா செல்ல முன்னர் இவர்கள் இருவரையும் வெளியேற்றாதது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
சிந்தனை மூன்று
சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டுமென மட்டக்களப்பில் சம்மந்தர் பிரச்சாரம் செய்துய்ளார். பிரபாகரனின் மாமியாரை மாலைதீவு கொண்டு சென்றுள்ளார் சிவாஜிலிங்கம். மகிந்த ஆதரவு இல்லாமல் சிவாஜிலிங்கத்தால் இப்படியான காரியங்களை செய்ய முடியுமா ? இப்படிச் சிந்தித்தால் கூட்டமைப்பிற்குள் தெளிவான இரண்டு கோடுகள் துலக்கமாக தெரியும். காங்கிரசின் தேர்தல் வெற்றிக்கு நாமே காரணமென மகிந்தவின் அமைச்சர் ஒருவர் கூறியது இந்த எண்ணத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
சிந்தனை நான்கு
இதுவரை புலிகள் இருந்த காரணத்தால் புலியை காட்டி சிங்கள அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருந்தது இந்திய சர்க்கார். இப்போது புலிகள் இல்லாத வெற்றிடம் சிங்களவரில் ஒரு பகுதியை இந்திய எதிர்ப்பாளர் ஆக்கும் நிலமையை உருவாக்கியிருக்கிறது. ஆக இந்திய இராஜதந்திரத்திலும் ஒரு சறுக்கல் காணப்படுகிறது. இந்திய வெளியுறவுத் துறை செயலர் நாராயணனின் பதவி மாற்றத்தை இத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க நமக்கு தடையெதுவும் கிடையாது.
1000 தடவைகள் ரணில் இந்தியா போனார்..
500 தடவைகள் மகிந்த போனார்…
நடந்தது என்ன ?
மேலும் பல சிந்தனைகள் உண்டு…
மெல்ல மெல்ல சிந்திப்பதே நல்லது…
(அலைகள் இணையத்தில் www.alaikal.com வெளிவந்த மேற்படி கருத்துரையை இங்கு வாசகர்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளோம் – ரெலோ நியூஸ்)
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply