வடக்கு அபிவிருத்தி வங்கியை ஸ்தாபிக்க மத்திய வங்கி இணக்கம்

 வடக்கு அபிவிருத்தி வங்கியை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று முன்தினம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக வடக்கு அபிவிருத்தி வங்கி ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர், வடக்கு மாகாண ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களிடமும் கடந்த நவம்பர் மாதம் விடுத்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் வங்கித்துறை மேம்படுத்தப்பட்டு, பல வங்கிகளின் நூற்றுக்கு மேற்பட்ட கிளைகள் திறக்கப்பட்டு வடக்கின் அபிவிருத்தி பணிகளில் பங்கெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வடக்கு அபிவிருத்தி வங்கியை ஆரம்பிப்பதற்கு அவசியமில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் சார்பாக மத்திய வங்கியின் மேற்பார்வை பதில் இயக்குநர் திருமதி பெனான்டோ, பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளைக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சனச அபிவிருத்தி வங்கியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையை நேரில் சந்தித்து தாம் வடக்கு அபிவிருத்தி வங்கியை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி உயர்தர மாணவிகளுடனான கலந்துரையாடலில், மாணவி ஜனனி நித்தியானந்தன் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வடக்கு அபிவிருத்தி வங்கியை ஸ்தாபிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவுள்ளதாகத் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply