தேர்தலில் வெற்றி பெற இனவாதத்தைத் தூண்டும் மகிந்த அரசு
சிங்கள மக்களிடம் இனவாதத்தைத் தூண்டி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற மகிந்த அரசு முயற்சிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த வாரம் டில்லிக்கு விஜயம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அக்கறை காட்டும் பிரமுகர்களை சந்தித்தோம். எனினும் இவ்விஜயம் குறித்து ஊடகங்களில் பல ஊகங்களுடனான செய்திகள் வெளியிடப்பட்டன.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை டில்லிக்கு அழைத்த இந்திய அரசு போர் குறித்த சர்ச்சையான விடயங்களையும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் தேர்தல் பிரசாரங்களில் பேசக் கூடாது என எச்சரித்தது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவ்வாறானதொரு எச்சரிக்கை எமக்கு விடுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தை இந்திய அரசுக்கு விளக்குவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை கேட்டிருந்தோம்.அதற்கான அனுமதி உடனடியாகக் கிடைத்ததும் நாம் அங்கு சென்று எமது முடிபு குறித்தும் இதனை எடுப்பதற்கு முன் பிரதான இரு வேட்பாளர்களுடனும் தேசிய விடயங்கள் குறித்தும் விளக்கமளித்தோம். அதனை இந்திய அரசு பூரணமாக ஏற்றுக்கொண்டது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட இடம் பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துதல் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முடிபு எமது மக்களுக்கான தீர்வே. எனவே எமது நட்பு நாடான இந்தியாவுக்கு அது தொடர்பில் விபரித்து அந்த நாட்டின் ஆதரவும் எமக்கு வேண்டும்.ஆளும் அரசு ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியுறப்போகிறோம் என்பதை அறிந்து சிங்கள மக்களிடம் இனவாதத்தை தூண்டி வெற்றிபெறலாம் என முயற்சிக்கின்றது.
இதனாலேயே பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சோவிற்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அரசு பிரசாரம் செய்து சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகின்றது.தேர்தலில் தோல்வியுறப் போகின்றோம் என்பதனால் இனத்துவேசத்தை பரப்பும் மகிந்த ராஜபக்வை வெளியேற்றும் பொறுப்பு சிங்கள மக்களிடம் மாத்திரம் இல்லை தமிழ் மக்களின் கடமையுமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், ராஜபக் சகோதரர்களுடன் பேசும் போது அது கள்ளமாகத் தெரியாத அரசுக்கு இப்போது பொன்சேகாக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தபின்பு தான்கள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
பலாத்காரமான தேர்தல் பிரசாரம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களை பலாத்காரமாக தமது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவது அர சின் ஜனநாயக விரோத செயற்பாட்டாகும்.கடந்த 8 மாதங்களுக்கு மேலாக அரச புலனாய்வுத்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் விடுவிக்கப்பட்டு தற்போது வன்னியில் அரசாங்கத்திற்கான பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்.
கனகரத்தினம் எம்.பி.விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அரசு அவரை வீடு செல்ல அனுமதி வழங்காமல் வடக்கு மாகாண ஆளுநரின் வவுனியா வாசஸ்தலத்தில் தங்கவைத்துள்ளது.அத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் அமைச்சு வாகனங்களை வழங்கி வன்னியில் பிரசாரத்தில் அவரை ஈடுபடுத்தியுள்ளது. ஆகவே அரசின் இப்படியான போக்குகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆட்சி மாற்றம் தேவை
தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலை நடத்துவதற்கு நிச்சயமாக நாட்டின் ஆட்சி மாற்றம் வேண்டும்.இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தயாரித்து வழங்கியது.எனினும் அந்தத்தீர்வுத்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்குப்பைத்தொட்டிக்குள் வீசிவிட்டார்.அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப் பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் முன் வைக்கப்பட்ட அறிக்கையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மகிந்த அரசு
இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தான் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வியாபாரிகள் உட்பட பல பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இதனால் வடக்குக்கிழக்கில் மனித உரிமை மீறல்கள் உச்சக் கட்டத்தில் இடம்பெற் றது. 3 இலட்சம் மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தனர். அம்மக்களை முகாம்களில் அரசு தடுத்து வைத்தது.ஆனால் இம் மக்களை மீள்குடியேற்று கிறோம் என தெரிவிக்கும் அரசு நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டுள்ளது.
பற்றைக்காட்டில் வன்னி மக்கள்
வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மக்கள் பற்றைக்காடுகளுக்குள் கழி மண்ணால் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழுகிறார்கள். அத்துடன் அம்மக்களுக்கு உலக உணவுத்திட்டத்தினால் வழங் கப்படும் அரிசி, பருப்பு, சீனி போன்றவற்றை விற்றுத்தான் பலர் தமது குழந்தைகளுக்கு பால்மா, மருந்துவகைகளை வாங்குகின்றனர்.மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்காக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பசில் ராஜபக்வும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தாம் வழங்குவதாகத் தெரிவித்து கை யளிக்கின்றனர்.அத்துடன் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் விவசாயம், மீன்பிடியில் ஈடுபடுவதற்கான போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
பொன்சேகாவிற்கு வாக்களியுங்கள்
ஆகவே இப்படிப்பட்ட அரசு மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்காக பொன்சேகாவிற்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை. எல்லாமே முடிந்து விட்டது என்று ஒதுங்கியிருந்து விடாமல் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தை யும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளால் தான் வெற்றிபெற்றேன் என்பதை சரத் பொன்சேகா தெரிந்து கொள்வதன் மூலம்தான் எமது அழுத்தங்களை அவருக்கு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply