புலிகள் மஹிந்தவுடன்; ஆனால் மக்கள் எங்களுடன்: மனோ கணேசன்

தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் உள்ளதாகவும் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களே மஹிந்த அரசாங்கத்துடன் இருப்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நேற்று சிரச ரிவி யில் இடம்பெற்ற சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபன விளக்கத்தில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜெனரல் பொன்சேகா, ரணில் விக்கரமசிங்க, மங்கள சமரவீர, ரில்வின் சில்வா, றவுப் ஹக்கீம் ஆகீயோருடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பல ஊடவியலாளர்கள் கலந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான பல்வேறுபட்ட கேள்விகளை எழுப்பினர். கேள்விளுக்கு அங்கு கலந்திருந்த மேற்படி அறுவரும் பதிலளித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதையிட்டு மஹிந்த தரப்பினரால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் விதைக்கப்படுவதாகவும் , தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பிரிவினை ஒன்றுக்கான ஒப்பந்தம் ஒன்றினை ஜெனரல் பொன்சேகா மேற்கொண்டுள்ளாதாகவும் சிங்கள மக்களை ஏமாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், அவ்வாறான எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் தங்களுடன் இருப்பாதாகவும், புலிகளின் முன்னணி உறுப்பினர்களான கருணா , பிள்ளையான் , கே.பி , மனோ மாஸ்ரர் , ஜோர்ச் மாஸ்ரர் போன்றோர் மஹிந்த அரசுடன் இணைந்துள்ளதை மக்கள் உணர்ந்து கொண்டு யார் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை கொண்டுதான் நாம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்க முன்னரே நாம் யாழ்பாணம் உட்பட பல தமிழ் பகுதிகளுக்கும் சென்றிருந்தோம். அங்கு மக்கள் வெள்ளமொன்று எம்முடன் இணைந்திருந்தது.

எனவே, இன்று தமிழ் மக்களாகிய நாம் சிங்கள , முஸ்லிம் மக்களுடன் ஐக்கிய இலங்கையினுள் ஒன்றாக வாழ விரும்புகின்றோம் என்ற செய்தியை சொல்லியிருக்கின்றோம். அதை ஏற்று சிங்கள மக்கள் எம்முடன் வாழ விருப்புடையவர்களாக இருந்தால் ஜெனரல் பொன்சேகாவிற்கு வாக்களிக்க வேண்டும். அன்றேல் தமிழ் மக்களுடன் வாழ விருப்பமில்லை என்ற செய்தியை மஹிந்தவிற்கு வாக்களித்து தெரியப்படுத்தலாம் என்ற செய்தியை சிங்கள மக்களுக்கு விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply