அரசியல் யாப்பு மாற்றம்; செனட் சபை ஏற்படுத்தப்படும்; விருப்பு வாக்கு முறை நீக்கம்: பிலியந்தலை இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி

அரசியல் யாப்பு மாற்றப்படும். செனட் சபை ஏற்படுத்தப்படும். அதில் எல்லா மாகாணங்களும் பிரதிநிதித்துவம் வகிக்க ஏற்பாடு செய்யப்படும். இதன் ஊடாக நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்படும், விருப்பு வாக்குமுறை நீக்கப்படும், மக்கள் சபை ஏற்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும், ஊழல், மோசடி ஒழிக்கப்படும், நாடு துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் 23ம் திகதி பிலியந்தலை, சோமவீர சந்திரசிறி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிக்கட்ட ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். அதேநேரம் கட்சி அரசியல் பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமோக வெற்றியில் பங்காளராக ஆகுவதற்கு முன்வருமாறு எஞ்சியுள்ள ஐ.தே.க. வினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அமைச்சர் காமினி லொக்குகேயின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தூர நோக்கு எம்மிடமுள்ளது. நாடு பின் நோக்கிச் செல்ல இடமளிக்க முடியாது. அதனால் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சகலரும் எம்முடன் கை கோர்க்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலை வன்முறைகளின்றி அமைதியாக நடத்த வேண்டிய பொறுப்பும், அமைதியையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் எம்மிடமுள்ளது. ஊழல், மோசடி ஒழித்துக்கட்டப்படும். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளியேன்.

நாம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவித்திருக்கின்றோம். இந்த நாட்டைப் பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் தேவையான திட்டங்களை நாம் கொண்டி ருக்கின்றோம். அவற்றைச் செயலுருப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிராம மட்ட மக்களுக்குச் சிறந்த சேவை வழங்கவென ஜனசபா (மக்கள் சபை) ஏற்படுத்தப்படும். இவற்றில் பட்டதாரிகள் கடமைக்கு அமர்த்தப்படுவார்கள்.

அதேநேரம் அரசியல் யாப்பில் மாற்றம் செய்வோம். செனட் சபையை ஏற்படுத்துவோம். இந்த சபையில் எல்லா மாகாணங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். இதன் மூலம் நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம் ஏற்படும்.

இதேவேளை, தற்போதைய தேர்தல் முறையால் ஆளுக்காள் அடித்துக் கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. இதுவே தேர்தல் வன்முறைகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. ஆகவே, விருப்பு வாக்கு முறை முற்றாக நீக்கப்படும். இதன் பின்னர் விருப்பு வாக்குக்காக எவரும் சண்டை பிடிக்க வேண்டிய தேவை ஏற்படாது. உங்களுக்கு விருப்பமான வரை சுதந்திரமாகத் தெரிவு செய்ய வழிசெய்து தரப்படும்.

வஞ்சம், குரோதம் போன்ற பண்புகளை பரப்பும் அரசியல் முறை ஒழித்துக் கட்டப்படும். அன்பினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்படும்.

வீடற்றோருக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. 27ம் திகதி முதல் எனது நேரடி கண்காணிப்பின் கீழ் அமைச்சர்கள் இப்பணியில் ஈடுபடுவர்.

தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் இரண்டு இலட்சம் பேருக்கு இவ்வருடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும். எதிர்காலத்தில் உலகை வெற்றி கொள்வதற்காக உங்களது குழந்தைகளை தயார்படுத்துங்கள்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் நான் பதவிக்கு வரும் வரையும் இந்நாட்டினரின் தலா வருமானம் ஆயிரம் டொலர்களாகத்தான் இருந்தது. இதனை எனது பதவிக் காலத்தில் 2200 டாலர்கள் வரை அதிகரிக்கச் செய்துள்ளேன்.

நாட்டில் உண்மையான மாற்றத்தையும், மேம்பாட்டையும் ஏற்படுத்தியவர்கள் நாமே. அதனால் ஐ. ம. சு. முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தின் அமோக வெற்றியில் பங்காளராக ஆகுவதற்கு எஞ்சியுள்ள ஐ. தே. க.வினரும் முன்வர வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மிலிந்த மொரகொட, ரோஹித போகொல்லாகம, சுசில் பிரேம ஜயந்த், ஜீவன் குமாரதுங்க, அச்சல சுரங்க நாகொட மற்றும் எம்.பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply