கடற்படையினரின் வண்டியில் சட்டவிரோத வாக்குப்பெட்டி: வெறும் பொய்
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான `ட்ரக்` வண்டியொன்று சட்டவிரோத வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களுடன் சென்று கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தெரிவித்தார்.
அவ்வாறு கூறப்படும் செய்திகளை கடற்படை முற்றாக மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்படை `ட்ரக்` வண்டியில் சட்டவிரோத வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் கொண்டு செல்லப்படும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி மேலும் விபரிக்கையில்,
கடற்படைக்குச் சொந்தமான 6284 என்ற இலக்கமுடைய ட்ரக் வண்டி கொழும்பு வெலிசர கடற்படை முகாமிலிருந்து திருகோணமலை கடற்படைத் தளத்தை நோக்கி கடந்த 23ம் திகதி கடற்படையினருக்குச் சொந்தமான வரிவிலக்கற்ற பொருட்களை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அந்த ட்ரக் வண்டியில் 117 கார்ட்போர்ட் பெட்டிகளும், 116 பிளாஸ்டிக் பெட்டிகளும் பொருட்களுடன் இருந்துள்ளன.
கடற்படை நலன்புரி பிரிவினரால் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி பொருட்கள் 729905 மற்றும் 729906 ஆகிய இலக்கமுடைய பற்றுச்சீட்டுக்களுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதியும் இத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் கப்பல் மற்றும் படகுகளில் சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்கு வரி விலக்கற்ற பொருட்கள் வழங்குவது வழக்கம் என்று தெரிவித்த கடற்படை தளபதி அந்த அடிப்படையில் திருமலை கடற்படைத் தளத்திலுள்ள கப்பல் மற்றும் படகுகளில் சேவையாற்றும் வீரர்களுக்குச் சொந்தமான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் – ஒக்டோபர் மாதத்திற்குரிய வரிவிலக்கற்ற பொருட்களாகும் என்றார்.
அந்த ட்ரக் வண்டியில் திருமலைக் கடற்படைத் தளத்துக்கு தேவையான ஐந்து தார் பீப்பாக்களும் ஒரு கேஸ் சிலிண்டரும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் கடற்படைத் தளபதி சுட்டிக்காட்டினார்.
ட்ரக் வண்டி தொடர்பாக குருநாகல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அந்த ட்ரக் வண்டியை நிறுத்தி சோதனையிட வேண்டுமென்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளனர்.
காரணத்தை கேட்டறிந்த அந்த வண்டியில் இருந்த கடற்படை அதிகாரி சோதனை யிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் சோதனையிட ஆரம்பித்த பொலிஸார் இரண்டு மணித்தியாலம் சோதனையிட்ட பிறகு அவற்றில் கூறப்பட்ட அடிப்படையில் எதுவும் இருக்கவில்லை என்பன உறுதி செய்த பின்னர் இரவு 8.30 மணியளவில் விடுவித்துள்ளனர். திருமலை கடற்படைத் தளத்தை நோக்கி ட்ரக் வண்டி புறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply