பாகிஸ்தானை தாக்க வேண்டாமென இந்தியாவுக்கு வேண்டுகோள் – பாக். ஜனாதிபதி அசிஃப் அலி சர்தாரி
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்காக பாகிஸ்தானை தாக்கிவிட வேண்டாமென இந்தியாவுக்கு அந் நாட்டு ஜனாதிபதி அசிஃப் அலி சர்தாரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவும் பாகி்ஸ்தானும் தீவிரவாதத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தீவிரவாதிகளால் பாகிஸ்தான் படாதபாடுபட்டு வருகிறது. தீவிரவாதத்துக்காக மிகப்பெரிய விலையை பாகிஸ்தான் மக்கள் கொடுத்துள்ளனர் என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் ஒரு இக்கட்டான தருணத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் எல்லையில் அல்-கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இவர்களை ஒடுக்க வேண்டிய கடமை உலகின் எல்லா நாடுகளுக்குமே உண்டு.
இவர்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இடையே போரை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலை காரணமாக வைத்து பாகிஸ்தானை இந்தியா ராணுவரீதியில் தாக்கிவிடக் கூடாது.
இதன் மூலம் தீவிரவாதிகளின் சதிக்கு இந்தியா பலியாகிவிடக் கூடாது. இந்திய-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் தீவிரவாதிகள் தான் மேலும் பலம் பெற்று விடுவார்கள்.
தீவிரவாதத்துக்கு எதிராக என் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் போன்ற சூழல் வந்தால் அந்த நடவடிக்கைகளும் தடை பட்டுவிடும்.
பாகிஸ்தான் அரசின் கவனம் திசை திருப்பப்படும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நாங்களும் தான் அவர்களுடன்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது இந்தியாவுக்கே தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply