மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் வன்முறை

இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக போலீஸ் மற்றும் அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிப்பதாக பிபிசி தமிழோசை செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர மேயர் அதிகாரபூர்வ இல்லத்தில் கைக்குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இதுவன்றி அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதும் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதே போல ஓட்டமாவடி பகுதியிலும், காத்தான்குடி பகுதியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் இல்லங்கள் மீதும் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.

தேர்தலில் தோல்வியடைந்த பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவின் தேர்தல் முகவராக பணியாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவரது வியாபார நிறுவனம் ஏறாவூர் பகுதியில் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.

இந்த சம்பவங்களுக்கு ஆளும் கட்சியே காரணம் என்று கூறப்படுவதை அவர்கள் மறுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply