தமிழ்நேஷன் இணையம் எடுத்த முடிவை கூட்டமைப்பு எடுக்குமா?

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த தமிழ்நேஷன் (tamilnation.org) இணையம் கடந்த 25ம் திகதியுடன் தனது தளத்தினை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இதே போல் சில மாதங்களுக்கு முன் புதினம் மற்றும் தமிழ்நாதம் போன்ற இணையங்களும் தமது தளங்களை மூடின.

இந்த வரிசையில் அதிர்வு இணையமும் நேற்று முதல் சேர்ந்துள்ளது போல் உள்ளது. இதனை உறுதியாக சொல்ல முடிய வில்லை.

இவ்வாறான அதிதீவிர `தமிழ்த் தேசியம்` பேசிய இணையங்கள் மூடுண்டு போகும் `பின் யுத்தகால` (Post-War) சூழலில் யதார்த்தமான தமிழ்த் தேசியத்தின் எதிர்கால அரசியல் உள்ளடக்கம் என்னவாக இருக்கப் போகிறது?

இந்த `பின் யுத்தகால` சூழல் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் முக்கிய பாராளுமன்ற பிரதி நிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்?

`தமிழ்த்தேசிய` தலைமைகளென அழைக்கப்பட்ட தமிழ்க் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக முன்னெடுத்து வந்த `தமிழ் அரசியல்` முப்பது வருட அகிம்சை போராட்டத்தையும் முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் கடந்த வருடம் மே 18ல் ஒரு முட்டுச் சந்துக்குள் கொண்டுபோய் நிறுத்தியது.

அதிலிருந்து மீண்டெழுந்து தமிழ் மக்கள் தம்மைதாம் சுதாகரித்துக் கொள்வதற்குள் கூட்டமைப்பு, `பின் யுத்தகால` தென் இலங்கை சூழலின் யதார்த்தை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் அல்லது உள்வாங்க மனமில்லாமல் அரசியல் ராஜதந்திரமும் தொலை நோக்கும் அறவே இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆட்சி மாற்றத்துக்காக ஆதரிப்பதாக தமது முடிவை அறிவித்தது.

கடந்த அறுபது வருடங்களாக தமிழ் மக்களை `கொதிக்கும் தவளையின் நடத்தை (The Boiling Frog Phenomenon) கொண்ட மிகமோசமான ஒர் அரசியல் வியாதியில் சிக்கிக்கொள்ள வைத்த `தமிழ்த் தேசிய` தலைமைகள் தாமும் அந்த விபரீதமான வியாதியில் சிக்கியுள்ளதை கண்டு கொள்ள முடியாமல் நோய்ப் படுக்கையில் விழுந்து விட்டதையே, இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் துயரமான அரசியல் செய்தியாக கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை, புதினம் மற்றும் தமிழ்நேஷன் போன்ற இணையங்களின் மூடுவிழா, புலம்பெயர் தமிழர் அரசியல் சூழல், தமிழ் மக்களை பீடித்துள்ள `கொதிக்கும் தவளையின் நடத்தை` கொண்ட அரசியல் வியாதியை தெட்டத் தெளிவாக இனங்கண்டுள்ளதால் (Diagnose) அந்த நோய்கான பரிகாரம் (Treatment) மிக எளிதானதாக இனி அமையக் கூடும்.

ஒருவரின் நோய்க்கு என்ன பரிகாரத்தை என்பதை விட, ஒருவருக்கு என்ன நோய் என்பதை அறிவதே மிகமிக சவாலாக விடயமாகும்.

தமிழ்நேஷன் இணையம் மூடிய தளத்தில் தொங்க விட்டப்பட்ட சங்ககால பாடல் சுவாரசியமானது என்பது மட்டுமல்ல உள்ளர்த்தங்கள் நிறைந்தவை என்பதையும் உன்னிப்பாக கிரகிக்கும் எவரும் கண்டு கொள்ளமுடியும்.

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

`தமிழ்த் தேசிய` தலைமைகள் தமிழ்த் தேசியமும் தாமும் அழிவது குறித்து அக்கரை கொள்ள மறுக்கிறது என்பதையும் தமது எல்லா அழிவுகளுக்கும் புறநிலைக் காரணிகளை மட்டுமே குற்றஞ் சொல்லி `கொதிக்கும் தவளையின் நடத்தை`யில் இருப்பதை சங்க கால கவிஞன் கணியன் பூங்குன்றன் அவர்களின் பாடலின் இரண்டாவது வரியான, `தீதும் நன்றும் பிறர்தர வாரா` என்பது துலாம்பரமாக எடுத்தியம்புகிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply