கஜேந்திரனின் அறிக்கையை மறுத்து சுரேஸ் பதிலடி
ஜனாதிபதித் தேர்தலில் யாழ். குடாநாட்டில் சுமார் 47.48 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முத்தலைமைகளில் ஒருவரான யாழ் மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனரென கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் விடுத்த அறிக்கைக்கு பதிலடியாகவே சுரேஸ் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுக்க முக்கியமான காரணகத்தாக்களான சுரேஸ், மாவை, சம்பந்தன் ஆகியோரை குறிவைத்து தாக்கியே கஜேந்திரன் தனது அறிக்கையில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் யாழ். மக்களுக்கு பல அச்சுறுத்தல்கள் மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் இருந்தும்கூட சுமார் 1,85,000 பேர் வாக்களித்துள்ளதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் திருப்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாழ். குடாநாட்டில் சுமார் 47.48 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 7 இலட்சம் பேர் இருக்கின்ற நிலையில் தற்போது 4 இலட்சம் வாக்காளரே உள்ளனர். மிகுதி 3 இலட்சம் பேரில் 2 இலட்சம் பேர் புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் இருக்கின்ற அதேசமயம் கிளிநொச்சியில் ஒரு இலட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில், சுமார் 1,85,000 பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல் கூட்டமைப்பின் கருத்துகளை ஏற்று வவுனியா, மன்னார் ஆகிய இடங்களிலும் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் தினமான காலையிலேயே குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் அச்சத்தின் மத்தியிலும் பஸ்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்ற நிலையிலும் போக்குவரத்து வசதியின்றி பல்வேறு சிக்கலான சூழ்நிலையில் வாக்களித்துள்ளனர். இதையிட்டு நான் திருப்தியடைகின்றேன்.
முதலில் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும். இம் மக்கள் இயலுமான வரை பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக கருதுகின்றேன். கட்சி சரியான வழிநடத்தலை வழங்கவில்லையெனக் கூறுவதில் எந்த அர்த்தமுமில்லை என்பதை அழுத்திக் கூறியதன் மூலம் செல்வராசா கஜேந்திரனின் குற்றச்சாட்டுக்கு சுரேஸ் பதிலடி கொடுத்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
கஜேந்திரனின் அறிக்கைக்கு எதிரான சுரேஸின் பதிலடியை முதலில் வெளியிட்ட தமிழ்வின் சில மணித்தியாளங்களில் தனது தளத்தில் இருந்து சுரேஸின் கருத்தை கொண்ட குறிப்பிட்ட செய்தியை அகற்றிவிட்டமையும் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply