தேர்தலின் பின் ஊடக அடக்குமுறை தலைதூக்கியுள்ளதாக குற்றச்சாட்டு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்களுக்குள் ஊடகவியலாளர்களை துன்புறுத்தும், கைதுசெய்யும் மற்றும் செய்தித்தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (The Committee to Protect Journalists – CPJ ) தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிராக, அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இலங்கையின் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் பொப் டைட்ஸ் கோரியுள்ளார்.
லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டமை. எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய லங்கா இ நியூஸின் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை ஊடக சந்திப்பில் கேட்டதாக கூறப்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரை நாட்டில் வெளியேற கோரியுள்ளமை, லங்கா செய்திதாளின் செய்தியாசிரியர் சந்தன சிறிமல்வத்த கைதுசெய்யப்பட்டமை போன்ற சம்பவங்களை ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் சம்மேளனம் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளது.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு தமது ஆதரவை தந்திருந்தன. எனினும் அதனை முன்னிறுத்தி தேர்தல் முடிந்த பின்னர் அந்த ஊடகங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது எனக்குறிப்பிட்டுள்ள சம்மேளனம், அடிக்கடி ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply