தேர்தல் நடந்தது இலங்கையில்; வென்றது இந்தியா! தோற்றது அமெரிக்கா?
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை. எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு கடினமானதென்பதையே சுட்டிநிற்கின்றது.
இலங்கையின் அண்டை நாடான இந்தியா தனது அரசியல் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு இலங்கையின் கள நிலையை காய்நகர்த்துகின்றது.இந்தக் காய் நகர்த்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வரை அகப்பட்டுக் கொண்ட உண்மையை மறுப்பதற்கில்லை.
கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் தனது குடும்ப அரசியலைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்டு இந்திய மத்திய அரசின் உள்நோக்கம் உணர்ந்திருந்தும், தாளம் போடக் கற்றுக் கொண்டார். ஈழத் தமிழர்களின் விடயத்தில் அவரின் தப்புத்தாளங்கள் பல இடங்களில் பளிச்சிட்ட போதிலும், தனது குடும்ப அரசியலுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடலாகாதென்பதில் மட்டுமே அவர் கண்ணாயிருந்தார்.
இதனால் ஈழத் தமிழர்கள் என்றுமில்லாதவாறு துன்பப்பட்ட போது வெறும் நடிப்பைத் தவிர வேறு எதனையும் அவரால் செய்ய முடிய வில்லை. அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமிழந்த, ஒற்றுமையில்லாத அமைப்பாகி ஒருவரையயாருவர் தூற்றித் விமர்சிக்கும் துன்பத்திற்கு ஆளாகியது. இவர்களிடம் இருக்கக் கூடிய ஒற்றுமையீனம், பக்கம்சாயும் நேர்மையீனம் என்பவற்றை இந்தியா தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் இந்தி யாவுக்கு சென்று மத்திய அரசுடன் பேசுவோம் என்பதே தேர்தலுக்கு முன்பான கூட்டமைப்பின் அறிவித்தலாகும். இதிலிருந்து இந்தியாவின் காய் நகர்த்தல் எப்படியிருந்தது என்பதை ஊகிக்க முடியும்.
இதேநேரம் சரத் பொன்சேகாவை ஆதரித்த அமெரிக்கா தனது தோல்வியைப் பெரிதுபடுத்துவதற்கப்பால், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை வலியுறுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்திருந்தாலும், அது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான போட்டியாகவும் இந்தியாவின் வெற்றியாகவும் அமைந்த தென்பதே உண்மையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply