வடக்கு கிழக்கு தேர்தல் வெற்றிக்கு கூட்டமைப்பு உரிமை கோர முடியாது

வடக்கு கிழக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈட்டிய வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோர முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுக்களின் ஆயுத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இயங்கி வரும் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் களைந்திருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடிய சாத்தியம் காணப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதனைப் போன்றே குறித்த ஆயுதக் குழுக்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருட முதல் பகுதியில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் மக்கள் இன்னமும் அதிருப்தியுடன் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்ட அப்பாவி பொதுமக்களின் அவல நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திரமான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான சூழ்நிலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டவில்லை எனவும் சக்தி தொலைக்காட்சியில் தெரிவித்தார்..

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply