சம்பந்தருக்கு எச்சரிக்கை: ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டுமென செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார்.

ஐக்கியப்பட்டு இணைந்து வேலைசெய்யவேண்டும். பிரச்சினைக்கு இணைந்து தீர்வுகாண்பதற்கு முன்வரவேண்டும். பிரிவினைவாத பிரசாரத்தை மேற்கொள்வதன் மூலமாக அபிவிருத்தியை எதிர்பார்க்கமுடியாது. அது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக அமையும். பிரிவினைவாதத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் அன்றிலிருந்தே கோரிவருகின்றேன்.

என திட்டவட்டமாக குறிப்பிட்டார் சம்பந்தன் இவ்வாறுதான் விடுதலைப்புலிகளை புறம் தள்ளுவதற்காக அல்லது தமது சுய நலன்களிற்காக மக்களின் நலன் கருதி அரசாங்கத்துடன் சேருகின்றோம் அல்லது இணக்க அரசியல் என்று பலர் வரிந்து கட்டிக்கொண்டு சென்றனர். அவர்களின் அரசியல் வாழ்க்கை மக்களால் தோற்கடிகப்பட்டு வருகின்றன.சம்பந்தன் அவர்களையும் மக்கள் பல தடவை தோற்கடித்துள்ளனர். ஆனால் விடுதலைப்புலிகளின் உதவியுடன் மீண்டும் மக்கள் தலைவனாகலாம் என்ற உள் நோக்கோடு வந்த சம்பந்தன் அதனை இலாவகமாக பிடித்துக்கொண்டார்.

இப்போது மீண்டும் தனது சுய நலனை வைத்து தமிழ் மக்களின் உரிமைகளை அடகு வைத்து, நம்பிக்கை துரோகம் இழைக்க முயல்கின்றார். அதாவது இணக்க அரசியல் ஊடாகத்தான் அபிவிருத்தியினை செய்ய முடியும் என ஏமாற்றும் வித்தையினை காட்ட முயல்கின்றார். தான் ஓர் பிரிவினை வாதியாக அல்லாமல் அனைவரையும் அணைத்து போகும் பாங்கு உடையவராக காட்டுகின்றார்.

ஆனால் சிங்கள மக்களும், சிங்கள தலைவரும் பிரிவினை வாதத்தினையும், இனவாதத்தினையும் முற்று முழுதாக ஏற்றுக்கோண்டு செயற்படுகின்றனர். அதில் வெற்றியும் பெற்றுக்கொண்டனர். ஆகவே பிரிவினை வாதமும், இனவாதமும் மேலோங்கி போயிருக்கும் சிங்கள இனத்திற்குள் இணக்க அரசியல் என்பது டக்ளஸ், கருணா, பிள்ளையான் போலவே இருக்கும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாடம் கற்றுக்கொண்ட தமிழ் விரோத செயற்பாட்டாளர்கள் தாம் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டால் மக்களால் தோற்கடிக்கப்படுவர் என்ற அடிப்படையில் மெது மெதுவாக விலகி தாம் தனித்து போட்டியிட போவதாக முணு முணுத்துக்கொண்டு இருக்கையில் சம்பந்தனோ மீண்டும் அபிவிருத்தி கருதி பிரிவினை வாதத்தினை கைவிட போவதாக அறிவித்துள்ளார்.

தனது சொந்த கருத்தினை தமிழ் மக்களின் உரிமைகள் மீது பிரயோகிக்க கூடாது என்பதே எமது கருத்து. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட பெரும்பாலான கூட்டமைப்பு எம்.பி.க்களின் முடிவு ஒருவரையும் ஆதரிப்பதில்லை என்று இருந்த போதும் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு எம்.பி க்களை வற்புறுத்தியும், பல அழுத்தங்களை உபயோகித்துமே ஏகமனதான முடிவு என அறிவிக்கப்பட்டது.

இனி வரும் பொது தேர்தலிலும் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, அதிகார பரவலாக்கல் என்றுதான் தனது கொள்கையினை முன்வைத்து ஏனைய உறுப்பினர்களையும் தம்பக்கம் சாய வைப்பார். இல்லாவிடில் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்காது என விரட்டப்படுவார்கள்.

இப்போதே சிவாஜிலிங்கம் உட்பட பலருக்கு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் தேர்தலி தனித்து போட்டியிட்டதற்காக என கூறினாலும் காரணம் அதுவல்ல. காரணம் ஏற்கனவே தாம் விரும்பிய பல புதிய உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் சீட்டு தருவதாக சம்பந்தன் வாக்குறுதி அளித்துள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் ஒருபக்கம் மக்கள் தமிழீழ தாயகத்திற்காக வாக்களிக்க, தாயகத்தில் சம்பந்தன் பிரிவினையே தேவை இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பது மக்களை இரண்டாக பிரிக்கும் செயலாகவே இருக்கும். சிலர் கூறலாம் தாயகத்தில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் நிலமை விளங்காது கதைக்கின்றனர் என்று. நிலமை விளங்கி செயற்படுவதனால் எதனையும் மஹிந்த தரும் சாத்தியம் உண்டா? டக்ளஸ் அவர்களும் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுயாட்சி என்றார் நடந்தது என்ன? இவ்வளவு காலமும் தான் புலிகள் விடவிலை என்று காரணம் கூறினாலும் இப்போது கூட மக்கள் ஏற்று கொள்ளவில்லையே.

ஏன் கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியல் ஊடாக எதனை சாதித்து கொண்டு இருக்கின்றனர். ஆக குறைந்தது மீன்பிடி தடைகளை கூட கிழக்கு மாகாண தலைவர்களால் நீக்க முடிந்ததா?

ஆகவே ஓவ்வொரு தடவையும் மக்களுக்கு அழுத்தங்களை கொடுத்து அவர்களை தேர்தலில் திக்கு முக்காட வைப்பதனை விட்டு விட்டு கொள்கையில் உறுதியாக இருந்து செயற்படுவதே நீண்டகாலத்தில் தமிழ் மக்களிற்கு பிரயோசனமானது. மக்களை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. இணக்க அரசியல் இல்லாமல் சுயாதீனமாக மக்களிற்கு தேவையான உதவிகளை செய்து அவர்களுடனேயே இருந்து பணி புரிவதன் மூலம் மக்களிற்கு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும்.

மாறாக சம்பந்தன் மக்களிற்கு பீதிகளை உருவாக்கி ஒவ்வொருவரது கருத்துக்களையும் முடக்கி தமது கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பொறி முறைகளையே செய்து வருகின்றார். இது சாதாரணமாக சிங்கள அரசாங்கம் தேர்தல் காலங்களில் செய்யும் ஒன்றே என்பதனை சம்பந்தனும் அவரை அரசியலில் முதிர்ந்து பழுத்த பழம் எனக்கூறும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையேல் மீண்டும் யாராவது இவர்களது விடயங்களில் தலையிடவேண்டிய அசெளகரியமான சூழல் ஏற்படலாம். ஏனெனில், தாயகத்தில் மக்கள் இன்னமும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply