சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம்
தேர்தல்களின் போது சுகாதாரத்துறை யிலுள்ள சுமார் ஒரு லட்சத்து 50,000 ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக கருத்திற் கொண்டு சகல மட்டத்திலுமுள்ள ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
1981ம் ஆண்டு 15ம் இலக்க ஜனாதிபதி தேர்தல், 1981ம் ஆண்டு 01ம் இலக்க பாராளுமன்ற தேர்தல், 1988ம் ஆண்டின் 02ம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் 1989ம் ஆண்டு மார்ச் திருத்தப்பட்ட 262ம் சரத்தில் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரித்துடையோர் பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
இருப்பினும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுகின்ற சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அரசாங்க மற்றும் மாகாண ரீதியில் இருக்கும் சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களிப்பு நிலையத்தில் கடமைக்கு செல்வதால் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தொகையானோருக்கு வாக்களிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.
சுகாதாரத்துறையிலுள்ள டாக்டர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், உட்பட ஊழியர்கள் சுழற்சி முறையில் சேவை செய்வதில் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. வாக்களிப்பதற்காக 4 மணி நேரம் சந்தர் ப்பம் வழங்கப்பட்டாலும், நோயாளிகளை பராமரிக்கும் சேவையிலுள்ளவர்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை. பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கும்.
இந்த விடயம் தொடர்பாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு ஆலோசனையை சமர்ப்பித்திருந்தார்.
மத்திய அரசின் கீழுள்ள, மாகாண அரசுகளின் கீழுள்ள, நிரந்தர, சமயா சமய, பதில் ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், டாக்டர்கள், தாதியர்கள் உட்பட சகல தரத்திலான சுகாதாரத்துறை ஊழியர்களும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply