துருக்கி-இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு நடைபெற்றுள்ளது

துருக்கிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா குல்லைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு துருக்கி சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் இடம்பெற்றது. துருக்கி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்புக்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு வைபவபத்தின்போது 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன் இருநாட்டுத் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
இரு நாட்டுத் தலைவர்கள் மற்றும் தூதுக் குழுவினருக்கிடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, வர்த்தக நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விடயங்களும் இப்பேச்சுவார்த்தையின்போது முக்கியத்துவம் பெற்றிருந்தன.
பேச்சுவார்த்தையின் முடிவில் துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான நேரடி விமான சேவை மற்றும் சிறைக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மனோ விஜேரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் பங்குபற்றிய செய்தியாளர் மாநாடொன்றும் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான உலகப் பிரகடனத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இலங்கையும் துருக்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு மற்றும் முதலீடு என்பன தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது முக்கியமாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிக் கூறிய ஜனாதிபதி, சர்வகட்சிக் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
துருக்கி ஜனாதிபதி வழங்கிய இராப்போசன வைபவத்திலும் ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல்லுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply