ஆட்சியதிகாரத்தின் மூலம் சிறப்புரிமையை அனுபவிக்க இனவாத கலாசாரம் முன்னெடுப்பு; எழுந்துள்ள சவாலை முறியடிப்போம்: ஜே.வி.பி.
பிரபாகரனின் காலத்தில் கூட அவரிடமிருந்து மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளாத அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தற்போது அரசிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வருவதாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி சிறப்புரிமைகளை அனுபவிப்பதற்காக தற்போது அரசு முன்னெடுத்துள்ள இனவாத கலாசாரத்தை முறியடிப்பதற்கான சவாலை ஜே.வி.பி. கையிலெடுத்துள்ளதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;தேர்தலுக்கு முன் அரச ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட இடி அமீன், ஹிட்லர் ஆட்சி தற்போது ஆரம்பமாகியுள்ளது. மடமைத்தனமானவர்களிடம் அதிகாரம் சென்றால் குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகிவிடும் அதுதான் தற்போது நடக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலின் மூலம் தேசிய ஒற்றுமை ஏற்படுவதற்கான பொன்னான வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது. இனவாதம் தூண்டப்பட்டுள்ளது. தேர்தலின் பெறுபேறு இதுதான். இத்தேர்தல் முடிவுகளினால் சிறுபான்மையின மக்கள் சந்தேகமடைந்துள்ளனர். இது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை உருவாக்கும். அதன் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியேற்படும். வடக்கு மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்த யாழ்.நூலகத்தை எரித்த விளைவுகளை நாம் கடந்த 30 வருடங்களாக அனுபவித்தோம். மீண்டும் அந்த நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
இந்த நாட்டில் பௌத்த ராஜ்ஜியத்தின் அடிப்படையிலா கொலைகள் இடம்பெறுகின்றன? அரசியலில் மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்களை கொலை செய்வதுதான் இந்த நாடு பெற்றுக்கொண்ட சுதந்திரமா?
இந்த அரசு குரோதத்தை விதைக்கின்றது. சட்டம், ஒழுங்கு இன்று காட்டுச் சட்டமாக மாறியுள்ளது. இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 40 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊடகங்கள் , ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த அரசின் பாவச் செயல்களின் பங்காளியாக இன்று பிக்குகள் மாறியுள்ளனர்.
பிரபாகரனின் காலத்தில் கூட மரண அச்சுறுத்தலை எதிர்கொள்ளாத அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இன்று அரசிடமிருந்து மரண அச்சுறுத்தல் வருகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றார். அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேசும் உரிமை இவருக்கு எங்கிருந்து வந்தது?
அரசு இனவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. மீண்டும் ஒரு இனவாதத்திற்குள் நாடு செல்வதை நாம் அனுமதிக்கமாட்டோம். இதற்காக நாம் எந்த தியாகத்தையும் போராட்டத்தையும் செய்யத்தயார். இந்த இனவாத சவாலை முறியடிக்க நாம் தயார். அந்தச் சவாலை நாம் கையிலெடுத்துள்ளோம். அதில் வெற்றி பெறுவோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply