ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஊடக சுதந்திரம் மறுக்கப்படுவதை கண்டித்து  இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

“லங்கா ஈ நியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்”, “லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்”, “ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து”, “சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து” போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலாளர்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலாளர்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply