கூட்டமைப்பு எம்பிக்கள் இந்தியா பயணம்: சிவாஜிலிங்கத்தின் கூற்றைப் பிரேமச்சந்திரன் நிராகரிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்பிக்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்திகள் தவறானவையென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (04) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தேவையேற்படும்போது நாம் சந்திப்போம். ஆனால் அது அண்மையில் நடைபெறக் கூடியதொன்றல்ல. பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருந்தாலும் சரி, அல்லது ஊடகங்கள் தவறாக தெரிவித்திருந்தாலும் சரி இந்தச் செய்தியில் உண்மையில்லை.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலவைர்கள் இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது இலங்கை அரசினால் வடபகுதியில் தொடுக்கப்பட்டிருக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசைக் கோரவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான முடிவுகளை கொண்டதாக அமையுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. இவ்வாறு சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply