மன்னார் மீன்பிடித்தடை முற்றாக நீக்கம்

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

மீனவ தொழிலாளர்களுக்கு இதுவரை அமுலில் இருந்த பாஸ் நடைமுறை மற்றும் கெடுபிடிகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட கடற்படைத் தளபதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே கெடுபிடிகள் இன்றி மன்னார் மாவட்ட மக்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மீனவர்கள் தங்களது அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டு பாஸ் ஒன்றை எடுத்தே இதுவரை சென்றுவந்தனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் பாஸ் நடைமுறையும் முற்றாக நீக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் முதற்கட்டத்திற்கு என 12 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மாவட்டத்தின் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களுக்கே இந்த முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேச மீள் நிர்மாண அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்ட மக்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அரசாங்கம் மன்னார் பி. எம். சி. சோதனைச் சாவடியில் அமுலில் இருந்த சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் அகற்றப்பட்டுள்ளது என்றார்.

இதற்கமைய இந்தப் பிரதேசத்தின் ஊடாக செல்லும் மக்கள் குறித்த சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply