தமிழீழ பிரகடனம் செய்யப்போகின்றார்களாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் வலியுறுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தரவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழமே இறுதித் தீர்வென்ற பிரகடனத்தை இந்திய மண்ணில் வைத்து அவர்கள் வெளியிடக்கூடுமென தமிழகத்தின் முன்னணி நாளேடான “தினமணி’ நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் “தினமணி’ நிருபரிடம் கூறியதாவது;
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்கிறது. போர் நிறுத்தம் கோரி பல்வேறு தரப்பில் எழுந்த கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இந்நிலையில், போரை நிறுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமரை 22 இலங்கை தமிழ் எம்.பி.க்களும் நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளோம். இதற்காக வரும் 9 ஆம் திகதி சென்னை வருகிறோம்.
முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இலங்கை நிலை வரம் குறித்து விவாதிக்கவுள்ளோம். பின்னர் டில்லி சென்று பிரதமரை சந்திப்போம்.
இதற்கிடையில் வரும் 10 ஆம் திகதிக்குள் போரை நிறுத்த வேண்டும் என எங்கள் கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. இல்லையெனில் இலங்கை இனப் பிரச்சினை குறித்து தீவிரமான மாற்று முடிவை நாங்கள் எடுக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.
அந்த மாற்று முடிவானது “இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழம் மலர்வது மட்டுமே’ என்ற பிரகடனமாக இருக்கலாம். அந்தப் பிரகடனத்தை சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் திகதி இந்திய மண்ணில் வெளியிடுவோம் என்றார் சிவாஜிலிங்கம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply