தெலுங்கானா போராட்டம் – ஒரு படிப்பினை
இந்தியாவில் இப்போது தெலுங்கானா பிரச்சினை சூடு பிடிக்கின்றது. இந்தப் பிரச்சினையில் கே. சந்திரசேகர ராவ் இன்றைய கதாநாயகன்.
சென்ற வருடம் டிசம்பர் மாத முற்பகுதியில் சந்திரசேகர ராவ் ஆரம்பித்த உண்ணாவிரதத்துக்குப்பின் தெலுங்கானா பிரச்சினை கொதிநிலையை அடைந்தது.
தெலுங்கானா ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு பிரதேசம். முன்னர் ஹைதராபாத் நிஸாமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஹைதராபாத் நிஸாம் இந்திய யூனியனுடன் இணைய விரும்பாததால் இந்திய இராணுவம் 1947 செப்ரெம்பர் மாதத்தில் அவருக்கு எதிராக ‘ஒப்பரேஷன் போலோ’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அவரைப் பணிய வைத்தது.
அதன் பின் சிறிது காலம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் கீழிருந்த தெலுங்கானா 1956 நவம்பர் 1ம் திகதி ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தெலுங்கானாவுக்குத் தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை அன்று முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தனி மாநிலக் கோரிக்கைக்குக் காலத்துக்குக் காலம் தலைமை வகித்தவர்கள் அக் கோரிக்கையில் உண்மையான பற்றுறுதி கொண்டு செயற்பட்டார்கள் எனக் கூற முடியாது.
அவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக இக் கோரிக்கையைப் பயன் படுத்தியிருக்கின்றார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தராக விளங்கிய சென்னா ரெட்டி 1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்துக்குத் தலைமை வகித்தார்.
தெலுங்கானா மக்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கிப் போராட்டத்தை முன்னெடுத்தார். இது ‘ஜெய் தெலுங்கானா’ என்ற பெயரில் வன்முறைப் போராட்டமாக உருவெடுத்தது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 369 மாணவர்களும் அடங்குவர்.
சென்னா ரெட்டி 1971ம் ஆண்டு போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவர் பின்னர் பல முக்கிய பதவிகளை வகித்தார்.
இப்போது தெலுங்கானா போராட்டத்துக்குத் தலைமை வகிக்கும் கல்வகுண்டல சந்திரசேகர ராவ் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியஸ்தராக இருந்தவர். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இவரை மாநில அரசாங்கத்தின் பிரதிச் சபாநாயகராக நியமித்தார்.
தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதற்காக 2001ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறித் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியை ஸ்தாபித்துத் தெலுங்கானா போராட்டத்துக்குப் புத்துயிர் ஊட்டினார்.
சந்திரபாபு நாயுடு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையின் பக்கம் திரும்பியிருக்க மாட்டார். 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கபினற் அமைச்சர் பதவியை ஏற்றார்.
தெலுங்கானா கோரிக்கையை நிறைவேற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சந்திரசேகர ராவ் 2009 சட்ட சபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தெலுங்கானா கோரிக்கையைக் கிடப்பில் போட்டார்.
சட்ட சபைத் தேர்த லில் தோல்வியைத் தழுவிய நிலை யில் செல்வாக்கை வளர்ப்பதற்காக மீண்டும் தெலுங்கானா போராட்டத்தை ஆரம்பித்திருக்கி ன்றார். இந்தப் போராட்டத்திலும் ஏராளமானோர் பலியாகினர்.
தெலுங்கானாத் தலைவர்களின் அதிகார மோகத்துக்கு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply