ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி: பாலன்
மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு!
அன்புடையீர்
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவற்கான எமது 30 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களும் மாற்றங்களும் அடைந்துள்ளது.
எமது மக்களின் நலன்களை மனதில் கொண்டே நாம் போராட முனைந்தோம் என்பதில் எள்ளவும் ஜயமில்லை.
இவற்றினூடாக எமது மக்களுக்கு சாதிக்க முடிந்தவை என்ன என்பது அனைவரும் தெரிந்ததே.
இதன் பக்க விளைவுகளாகவேனும் எமது சமூகத்திற்கு என்ன நன்மைகள் ஏற்பட்டன என்பதும் கேள்விக்குரியதே. இப்போராட்டங்கள் எமது இனத்திற்கு எற்படுத்திய சீரழிவுகள், இழப்புகள், வேதனைகள் காலத்தால் அழிக்க முடியாத கவலையை ஊட்டுவன.
இருப்பினும்,
நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எமது நடைமுறை நம்பிக்கையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
எமது துரதிஸ்ட வரலாற்று நிகழ்வுகளுக்கு பல காரணங்களைக் காட்ட முடியும். எனினும் இவற்றில் முதன்மையானதும் தொடர்ந்தும் எம்மால் பேணி பாதுகாக்கப்படுவதும் பாறாங் கல்லாக இடையில் கிடந்து எம்மை தடக்கி விழுத்துவதும் ஒற்றுமையின்மை என்பதாகும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமே! எமக்கிடையிலான பிரிவினைகள் தகராறுகள் பிடிவாதங்கள் என்பனவே எமது தோல்விக்கு அடிப்படையாக அமைந்தன.
எமது மத்தியில் தோன்றிய பஞ்ச பாண்டவர்களும் தமக்குள் தகராறு செய்து கொண்டதாலும் சகபோராளிகள் சாம தர்ம பேதமின்றி சமாதியாக்கப்பட்டதாலும் அறிவு கூறக்கூடிய பரமாத்மாக்களும் துரோகிகளாக துவம்சம் செய்யப்பட எஞ்சியோர் வலுவின்றி வாயடைத்துப் போனதாலும் பாமர மக்கள் ஓடாத ஓட்டமெல்லாம் ஓடி பல தக்கிலும் தஞ்சடைய எமது போராட்டத்தால் மக்கள் மூச்சும் விடமுடியவில்லை. ஆதரவளித்து அமுல்படுத்தியிருக்கக் கூடிய அரசியல் தீர்வுகளிலும் தலைமைகள் அக்கறைப்படவில்லை.
இன்று நேற்று நாளை என தொடரும் எமது மக்களின் சோக வாழ்வை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் இனிமேலேனும் எமது கரங்கள் முழு ழனதுடன் ஒன்று சேர வேண்டும். நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நேச அரசியல் அமைப்புக்கள் தமது ஜக்கியத்தின் மூலம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.
தாழம் பூ கொண்டையாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!
எமது போராட்ட வடிவங்கள் உள்ளிருக்கும் உட்பூசலாலும் பழிவாங்கும் பண்பாலும் பலமிழந்திருப்பதை கண்டுணர முடியாது பலரும் இருந்திருக்கிறோம். தன் கையையும் தன் தலையையும் தானே வெட்டும் தப்பான பாதையில் போவதையும் தாயக தாகத்தின் தார்மீக கடமைகளாக தவில் வாசிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்.
தயவு தாரண்ணியமற்ற தவிர்க்கப்பட வேண்டிய கொலைகள் அனைத்தும் எமது மனித உணர்வுகளை மழுங்கவைத்தன. சரி பிழை உணர முடியாதபடி ஓங்கி மண்டையில் அறைவது போல் பல வருடங்களாக இவை தொடர்ந்தன. இந்நிகழ்வுகள் எமது இனத்தின் எதிர்காலம் பற்றிய எமது பார்வையில் இருளை ஒளியாக்கிக் காட்டின.
எந்த அடக்குமுறை வாழ்வை எதிர்த்து போராட முற்பட்டோமோ அந்த அடக்கமுறை வாழ்வின் கீழ் அனுபவித்த சுதந்திரமும் இறைமையும் அமைதியும் இழந்து கலைந்து குலைந்து தொலைந்து போன வாழ்வையும் கூட்டிச் சேர்த்த சோகத்தையும் இதயத்தில் புதைத்தபடி எமது சமூகம் உருமாறி வருகிறது.
அவர்கள் மௌனம் பேசும் வார்த்தைகள் புரிந்தால் நாம் மூச்சிழந்திருப்போம்.
அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய சிறிய பணி இந்த இழப்புக்கள் துயரங்கள் வேதனைகள் இனிமேலும் தொடராதிருக்க மனமுவந்து ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதேயாகும். அத்தகைய தைரியமான மனமாற்றம் ஏற்படுமாயின் நாம் எமது இனத்தின் விடிவுக்கு வித்திட்டவர்களாவோம்.
எமது மக்களின் விடுதலைக்காக நீங்கள் அயராது உழைப்பவர்கள். உங்கள் எத்தனையோ நண்பர்கள் தோழர்கள் இதற்காக தங்கள் உயிரையே அர்பணித்திருக்கறார்கள். அவர்களின் இலட்சியக் கனவுகள் நிறைவேற வேண்டுமெனில் உங்கள் கரங்கள் ஒன்று சேர வேண்டும்.
உங்கள் அயராத உழைப்பும் உணர்வுகளும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். உங்கள் மத்தியில் ஏற்படும் தைரியமான மனமாற்றம் ஒன்றே ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றெண்ணும் தைரியான மனமாற்றம் ஒன்றே எமது மக்களுக்குப் பலம் கொடுக்கும்.
மக்கள் மீதான உங்கள் நேசத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்களானால் அதற்கான வழியை எப்படியும் கண்டு பிடித்து விடலாம். மக்களும் ஆர்வடமுன் அளப்பரிய ஆதரவினை அளிப்பார்கள். தமது கவலைகள் நீங்கும் என்ற நினைவில் கண்கள் பனித்துப் போவார்கள்.
ஓற்றுமை வேண்டும் என்ற வைராக்கியம் வரும் பட்சத்தில் அஞ்சப்படும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் பலவிதமான சாதனைகளும் செய்ய முயன்றிருக்கிறோம்.
இந்த வைராக்கியம் மனதில் வேரூண்றி வளர எமது கனவு மெய்பட இப்பயிரையும் எமது மனங்களில் வார்தைகளில் செயல்களில் கண்ணீரூற்றி வளர்ப்போம்.
நாம் கோபதாபங்களினால் அலைக்கழிந்து இணைந்து செயல்படும் இதயம் இழந்து போனோமா? மனித நேயத்தின் ஆளுமையும் அதன் வழிகாட்டுதலும் தவறித் தூரப்போயினவா? மக்களின் உரிமைகளை உடமைகளை உயிர்களை பாதுகாக்க முற்பட்டு இறுதியில் எமது உயிர்களை எமது நண்பர்களிடமிருந்தே உடன்பிறப்புக்களிடமிருந்தே பாதுகாக்க வேண்டியவர்களானோமே.
இறுதி இலக்கும் தூரத் தூரப் போயிற்று.
இனியும் காலதாமதம் வேண்டாம்! உங்களுக்கிடையிலான விரோதங்கள் நொருங்கி ஒன்றுபடும் வைராக்கியம் உடன் வந்தேயாக வேண்டும்.
மக்களை நேசிக்கும் அனைத்து அரசியல் தலைவர்களே அல்லலுறும் எமது மக்களுக்காக பகமை உணர்வுகளிலிருந்து விடுபட்டு இன்றைய தேவையை – பணியை – கடமையை செய்ய உடனடியாக முன்வாருங்கள்!
எமது மக்களிடமிருந்து இந்த வேண்டுதல் – கோரிக்கை வானதிர மௌனமாக ஒலிப்பதை உணர்ந்து கொள்ளுங்கள!
மதம் பிடித்த யானை போலாகிவிட்ட எம்மிடையே தோண்றியுள்ள பூதாகரமான அரசியலை அதன் கருமூலங்களை முடிவுக்குக் கொண்டு வர உங்கள் அணைவருடைய நட்பும் ஒத்துழைப்பும் தேவை.
ஒருவரின் உள்ளம் எதனை இடைவிடாது சிந்திக்கின்றதோ அதுவே அவனது இயல்பும் வடிவும் ஆகும் என்பார்கள்.
இப்பொழுது முதல் எமது சிந்தனையும் செயலும் அணைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதாக இருக்கட்டும். ஒன்றுபட உறுதி கொண்டால் உயர்வும் உங்களைச் சேரும். தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் மெல்ல மெல்ல விலகியோடும்.
ஓன்றுபட்டு செயல்படுவதற்கான முயற்ச்சிகள் தொடர்ச்சியாக இலங்கை அரசியலில் நிகழ்ந்துள்ளது. பதவிகளைப் பெறவும் அரசமைக்கும் அந்தஸ்தை பெறும் நோக்குடனும் இந்த முயற்சிகள் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுள்ளன. சிங்கள அரசியல் கட்சிகள் தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு சிங்கள தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் கூட்டமைப்புக்களை வெற்றிகரமாக ஏற்படுத்தின. இதன் மூலம் நாம் கூற முயல்வது என்னவெனில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருதியும் மக்கள் நேச அரசியல் அமைப்புகளின் ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான தைரியமான மனமாற்றம் சாத்தியமாக முடியும் என்பதேயகும்.
உலக வரலாற்றின் விடுதலைப் போராட்டங்களில் பரமவைரிகளும் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டிருக்கிறார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அவ்வரறு சேர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலையை பெறமுடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான தைரியமான மனமாற்றமுமே ஆகும்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று சிங்கள பேரின அரசியல் கட்சிகளே ஒன்று சேர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி இணக்கப்பாட்டுடன் நியாயமான அரசியல் தீர்வினைப் அமுல்படுத்துவது தமிழ் அசியல் தலைமைகளின் கடமையே.
பல்வேறு வகையிலும் பிளவுண்டு எமக்கிடையில் முரண்பாடுகளை வளர்ப்பது இதற்கு எவ்வகையில் பயனளிக்கும்?
எனவே இனிமேலும் காலதாமதமின்றி உங்கள் மனக்கதவுகளைத் திறவுங்கள்.
இன்று அநேக உலக நாடுகளும் இந்தியாவும் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளன. எமது உரிமைகள் மறுக்கப்படுவதை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளன. ஏமக்கிடையில் ஒற்றுமை இருக்கும் போது மட்டிலுமே அவர்கள் ஆதரவு பயனுள்ளதாக அமையும். இல்லாவிடில் எமக்கிடையில் முரண்பாடுகளை வளர்த்து அரசியல் தீர்வினை இழுத்தடிப்பதிலேயே பேரினவாத சத்திகளும் எமது நாட்டினை கபளீகரம் செய்ய முனையும் வல்வரசுகளும் அக்கறை கொண்டிருக்கும்.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தலைதூக்கியுள்ள அராஜக பாசிச சத்திகளின் பலத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் அதன் கொடூர பிடியிலிருந்து எமது மக்களை விடுவிக்கவும் அதற்கு எதிரான அனைத்து சத்திகளின் ஒற்றுமையும் ஒன்றிணைந்த செயற்பாடும் அவசியமானதாகும். இதனை அணைவரும் உணர்ந்து அதற்கு முன்னுரிமை கொடுத்து ஒன்றுபடுவதற்கான முயற்சிகள் முழுமனதுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதுவரை கால எமது மக்களின் ஏமாற்றங்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் துன்பங்களையும் ஒருமுறை எண்ணிப் பார்போமாயின் ஒன்று சேர்வதற்கான தைரியமான மனமாற்றம் எளிதில் வரும். இதுவரை எமது அரசியல் உரிமைக்காக உயிர் நீத்த நண்பர்களையும் தோழர்களையும் அவர்தம் குடும்பங்களையும் நினைவு கூர்ந்து ஒன்று சேர்வதற்கான உறுதியினைப் பெறுவோம்.
அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கு வழி கோலுவோம்.
தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்க அதற்காக இலங்கை அரசினை நிர்ப்பந்திக்கவும் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் எமக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
இதில் ஏற்படக் கூடிய சங்கடங்கள் பற்றிய புரிந்துணர்தலோடுடனேயே தமிழ் பேசும் மக்களின் தேவையை மனதில் கொண்டு இன்றைய நெருக்கடி நிலமைகளிலிருந்து மீள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இக்கோரிக்கையை நடைமுயைப்படுத்துபடி கேட்டுக் கொள்கிறோம்.
அனைவரது கருத்துக்களும் ஜனநாயக ரீதியாக அக்கறையுடன் கருத்தில் கொள்ளப்பட்டு தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வினை அடையக் கூடிய வகையில் எமது மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர்ந்து செயல்படும்படிக்குத் தம்மால் இயன்ற அணைத்தையும் செய்யும்படி கோருகிறோம்.
இதனை நடைமுறைப்படுத்த சாதகமான முயற்சிகளை தயவு செய்து காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்துங்கள்!
மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களே!
தற்போது எம்முன்னுள்ள இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!
உங்கள் அயராத உழைப்பு மேலும் நன்மை பயக்க எமது வாழ்த்துகள்.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரதிமுன் பனியே போலே
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply