ஜனாதிபதித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக பொதுநலவாய நாடுகள் அறிவிப்பு

நியாயமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதாக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் தங்களது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். தேர்தலுக்கு முன்னைய காலத்தில் ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதை தவிர, ஜனாதிபதித் தேர்தல் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட ஓரு தேர்தல் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றுக்குத் தேவையான நியமங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் தேர்தல் நடைபெற்றதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஆணையாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்திற்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாகவும், அவை குறித்து தேர்தல் ஆணையாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சொத்து துஸ்பிரயோகம், பாதுகாப்பு துறையில் அரசியல் தலையீடு போன்றவை இந்தத் தேர்தலின் குறைபாடுகளில் சில என தெரிவிக்கப்பட்டுள்ளது, 17வது திருத்தச் சட்ட அமுலாக்கம், வாக்காளர் பதிவு முறைமை, கட்சிகளுக்கு இடையிலான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், அரச ஊடகப் பயன்பாடு போன்றவை தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரைகளை செய்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply