திராவிடக் கட்சிகளை புறக்கணிக்கும் மாணவர் சக்தி

”மாணவ தலைமுறையே சூளுரை எடுத்து துள்ளி வா, இந்தியெனும் அரக்கன் தமிழ் மொழியை அழிக்க வருகிறான், ஆர்ப்பரித்து அலைகடலென திரண்டு வா உணர்ச்சி பொங்க, உள்ளத்தில் வேள்வி தீயை எரிய விட்டு உன்னதனமான பணிக்கு மன உந்துதலோடு வா” என்று தமிழகத்தில் அக்காலத்தில் விடுக்கப்பட்ட திராவிடக் கட்சிகளின் அழைப்புகளை யாரும் இன்னும் மறக்கவில்லை.

இன்றளவும் கூட தமிழக அரசியல் தலைவர்களின் அறைகூவல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த அழைப்புகள் அனைத்தும் மாணவர்களைத்தான் பெரும்பாலும் குறி வைப்பவையாக உள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அரியணையில் இருந்து அகற்ற திமுகவுக்கு அப்போது மாணவர் இயக்கம்தான் பெருமளவு கை கொடுத்தது. திமுகவின் அன்றைய காலகட்டத்தில் அதன் கொடியை மாணவர்கள் தூக்கி வருவது போன்றே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அதே நிலை இருக்கிறதா என்றால். நிச்சயமாக இல்லை.

திமுக என்றில்லை எந்தத் திராவிடக் கட்சிக்குமே இன்று மாணவர்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இல்லை என்பது தான் நிதர்சனம்.

திமுக அன்றைய காலத்தில் மாணவ சக்தியை வைத்து தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்பட பல போராட்டங்களை முன் எடுத்துச் சென்றது.

அக்காலத்து பியூசி முதல் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களிடையே அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், கருணாநிதி ஆகியோரது பேச்சுகள், கட்டுரைகள், எழுத்துகள் ஈர்ப்பை ஏற்படுத்தின.

இந்த மாணவ சக்திதான் தமிழக அரசியலில் 1961 முதல் ஆட்சியாளர்களுக்குத் தூணாக இருந்து வந்தது.

தமிழகத்தில் வகுப்பு வாரி இட ஓதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கலில் தலைவர்கள் மாணவ சமூகத்தை தட்டியெழுப்பித் தான் வெற்றிகளைக் கண்டனர்.

1967ல் அண்ணா தலைமையில் திமுக அரியணையில் ஏறியபோது மாணவர் சமுதாயமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது. 67-68 நிதி அறிக்கையில் பேரறிஞர் அண்ணா தமிழகத்தில் இலவச கல்வியை அறிவித்தார். அந்த அறிவிப்பு கூனி, குறுகி கிடந்த விவசாய வீட்டு பிள்ளைகளை உலகறிய செய்யும் அறிவிப்பாக அமைந்தது.

அதன் பின் இந்தி எதிர்ப்பு போராட்டம். இதுவும் திராவிட கட்சிகளுக்கு மாணவ சமுதாயம் முழுமையாக ஒட்டு மொத்த ஆதரவையும் அளித்த போராட்டம். இலவச கல்வியெனும் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய மாணவ சமூகம், இந்தி ஆட்சி மொழியெனும் அறிவிப்பை எதிர்த்துப் போராடினர்.

தமிழகமெங்கும் தலைநகரங்களில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்து ஜனவரி 26 குடியரசு தினத்தை துக்க தினமாக கொண்டாடினர். பச்சையப்பன் கல்லூரியில் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மதுரையில் அரசியல் பிரிவு 17ன் நகலை மாணவர் கூட்டங்கள் எரித்தன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். ஏவிசி கல்லூரி மாணவன் சாரங்கபாணி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

மாணவர் சக்தி தமிழக அரசியலில் முக்கியப் பங்காற்றியது என்பதை விட திராவிட திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் அடித்தளமாக அமைந்தது என்பதே உண்மை.

அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறும் மாணவர் பேரவை தேர்தலில் திராவிடக் கட்சிகள் சார்பில் போட்டியிட தொடங்கினர்.

அதேசயம், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட மாணவர்கள் மத்தியில் வலுவாக வேரூண்றத் தொடங்கின.

திமுக ஆட்சிக் காலங்களில் மாணவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளி்ல் முக்கியத்துவம் கிடைத்தது. அதேபோல அதிமுகவும் தனது மாணவர் சக்தியை தக்க வைத்துக் கொள்ள பல வழிகளிலும் முயன்றது.

தி்முக மாணவர் பிரிவு, அதிமுக மாணவர் பிரிவுகளில் பொறுப்பு வகித்த கல்லூரி மாணவர்களுக்கு எம்ஜிஆர், கருணாநிதி ஆட்சி காலங்களில் எம்எல்ஏ உள்ளிட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆனால் சமீப காலமாக திராவிடப் போர்வைக்குள்ளிருந்து மாணவர்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. மாறாக, சிவப்புக் கம்பளம் போட்டு, கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கம் அவர்கள் சாயத் தொடங்கியுள்ளனர்.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி சமீப காலமாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி, ஆட்சியைப் பிடிப்பது எப்படி, யாருடன் கூட்டணி சேரலாம், எந்தக் கூட்டணியைக் கலைக்கலாம் என்பது போன்ற சிந்தனைகளில் தீவிரமாக மூழ்கி விட்டதால், ஏறி வந்த ஏணியான மாணவர்களை அவர்கள் வசதியாக மறந்து விட்டதாகவே தெரிகிறது.

மாணவர் பிரச்சனை குறித்து முன்னேற்றகரமான திட்டங்களை செயல்படுத்தாததும் மட்டுமின்றி கல்வி கட்டண உயர்வு, குதிரை கொம்பாக மாறிவரும் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்புகள் வேலை வாய்ப்புகளும் மாணவர்கள் நிறம் மாற ஒரு காரணம் என்று கூறுகின்றனர்.

இதுவே சமீபத்தில் தமிழக கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில், 16 பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்டு ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளில் முன்பெல்லாம் மாணவர் பேரவை தேர்தல்களில் திமுக அல்லது அதிமுக சார்பான மாணவர்களே வெல்வார்கள்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக பல்கலைக்கழகங்களிலேயே முதன்முறையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 66 கலை அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கி செயல்படும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் மாணவர் பேரவை தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான இந்திய மாணவர் பேரவை (எஸ்.எப்.ஐ) முதல் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இராண்டாவது முறை பலத்த போட்டிகள், ஜாதிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் அனுதாபிகள் என நெருக்குதல்கள் கூடின. இருப்பினும், எஸ்.எப்.ஐயே வென்றது.

3வது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் எஸ்.எப்.ஐக்குத்தான் வெற்றி. 51 கல்லூரிகளில் நடைபெற்ற தேர்தல்களில் 47 கல்லூரிகளில் எஸ்எப்ஐ வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக வலுவாக உள்ள தென்மாவட்டங்களில் காம்ரேடுகளுக்கு அதிக செல்வாக்கு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுதான். ஆனால் மாணவர் பேரவை தேர்தல்களில் திராவி்ட கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் வெற்றி பெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மாணவர்களை மறந்து போனதே திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு்க காரணம் என்று கூறப்படுகிறது.

தென் மாவட்ட கல்லூரிகளைக் கைப்பற்றியுள்ளது குறித்து எஸ்.எப்.ஐ. மாவட்ட பொறுப்பாளர் அருண் பிரவீன் கூறுகையில்,

இந்திய மாணவர் பேரவைக்கு கிடைத்த இந்த வெற்றி சாதாரணமானதல்ல, இதற்காக எங்கள் இயக்கத்தில் பலர் உயிர்ப் பலி கொடுத்துள்ளனர்.

93ல் மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவர் சோமசுந்தரம், செம்புலிங்கம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில குமார் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்திய மாணவர் பேரவையின் போராட்ட களம் வலுவானது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவ பேரவை தேர்தல் நடத்த வேண்டும் என்று 7 ஆண்டு காலமாக போராடியுள்ளோம். இறுதியாக முற்றுகை போராட்டம் நடத்திய பின்புதான் தேர்தல் நடத்த அப்போதைய துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் அனுமதி அளித்தார்.

தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகளில் கழிப்பிடம், மின்வசதி, காம்பவுண்ட் சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதியின்றி இருக்கின்றன. அவைகளை அரசு இனம் கண்டு நிதி ஓதுக்கீடு செய்து செம்மைபடுத்த முடியவில்லை. ஆனால் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறது.

அதிகாரம் கொண்ட ஆளும்கட்சி மறந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சனை. மேலும் நெல்லை மாவட்டத்தில் இந்த கல்வியாண்டு மட்டும் 16 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மாணவ, மாணவிகளுக்கு பிரச்சனை என்றால் எங்கள் இயக்கம் முன் நின்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

காம்ரேடுகள் போராளிகள் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் பிரச்சனையானலும், மாணவர் பிரச்சனையானலும் முதலில் நாங்கள் களத்தில் நிற்பதால் எங்களுக்கு வருங்கால இளைஞர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது என்றார்.

– கே.எம்.கே. இசக்கிராஜன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply