வன்னியில் புதிய பாடசாலை
வவுனியா மாவட்டத்தில் இடம் பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகளுக்கு ஒரே இடத்தில் கல்வியை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் விசேட பாடசாலையொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காமினி மகா வித்தியாலயத்தின் இரண்டு கட்டடங்களுடனும், 5 தற்காலிக கொட்டில்களுடனும், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது.
நேற்று சுமார் 2600 மாணவர்கள் கல்வி கற்பதற்காக வருகை தந்தனர்.
நிவாரணக் கிராமங்களை தவிர்ந்த வவுனியா மாவட்டத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வந்தனர். இதனால் பெற்றோரும், குறிப்பிட்ட மாணவர்களும் போக்குவரத்து உட்பட பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.
இடம்பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகள் மாவட்டத்திலுள்ள ஏனைய பாட சாலைகளுக்கு செல்வதால் இடப் பற்றாக்குறையும் நிலவியது. இவற்றை நிவர்த்திக்கும் பொருட்டு அனைத்து மாணவர்களையும் ஒரே இடத்தில் கல்வி கற்க வசதி செய்யும் நோக்குடனேயே இப்புதிய நடைமுறை செய்யப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்னம், உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான சீருடைகள், பாடநூல்களையும் இவர்கள் நேற்று வழங்கினர். இவ்விசேட பாடசாலைகளுக்கென மாணவர்களின் மேசைகள், கதிரைகள் போன்றவையும் வழங்கப்பட்டன.
இப்பாடசாலைக்கு சுமார் 4000 மாணவர்கள் வரையில் சேர்த்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
———
முன்னைய செய்தி:
நலன்புரி முகாம் மாணவர்களுக்கு புலம்பெயர்தோரே உதவ வேண்டும்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply