ஜெனரல் பொன்சேகாவை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமாம் : லியாம் பொக்ஸ்
வெளிப்படைத் தன்மை தலையாய அம்சமாக இருக்கும் சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யவேண்டும் என்று பிரிட்டிஷ் நிழல் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் தெரிவித்துள்ளார். லியாம் பொக்ஸ் நேற்று மாலை கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த பின்னர் செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
“சட்டம் ஆதிக்கம் செலுத்தும் என்ற மனோதிடத்துடன் சகல குற்றச்சாட்டுக்களும் விசாரிக்கப்படக் கூடிய சிவில் நீதிமன்றத்திலேயே ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான கருத்தாகும். சிவில் நீதிமன்றத்தில் நிலவும் ஒளிவுமறைவற்ற தன்மை, உள்ளூர், சர்வதேச சமுதாயங்களுக்கு நியாயாதிக்க நடைமுறைகளில் ஒரு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும். பொன்சேகாவை சூழ்ந்துள்ள நிலைமை இலங்கையின் மதிப்புக்குக் குந்தகம் ஏற்படுத்தலாம். இந்த நாடு எதிர்காலம் பற்றிய ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டும்போது, ஒரு பழிவாங்கும் செயலாக இத்தகைய ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியை சித்திரிப்பது பொருத்தமானதாக இருக்காது.
எவ்வாறாயினும், இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்ப்புக் கூறுவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை இல்லை. யாரை விசாரணை செய்யவேண்டும், யாரை விசாரணை செய்யக் கூடாது என்று வெளிநாடு அல்லது வெளிநாட்டமைப்பு ஒன்றினால் கூறமுடியாது.
ஆனால், நிகழ்வுகள் இடம்பெறும் விதத்தைப் பொறுத்து வெளிநாடுகள் இலங்கையைப் பற்றி புரிந்துகொள்ளும். சட்டம் நேர்மையாக அமுல்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. அது நேர்மையாக அமுல்படுத்தப்படுகின்றது என்பது மற்றவர்களால் உணரப்படவும் வேண்டும். மதிப்பு என்பது ஒரு பெரிய விடயம். இந்த நாடு பெருமதிப்பைப் பெறவேண்டிய ஒரு நாடாகும். இந்தக் குறிக்கோளை அடைய சகல அரசியல்வாதிகளும் பாடுபடுவார்கள் என்று நம்புகின்றோம்.” இவ்வாறு அவர் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply