அதிகாரங்களைப் பகிர்வு நாட்டின் இறைமைக்கு ஆபத்து: ஜே.வி.பி.
அதிகாரங்களைப் பகிர்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அது நாட்டுக்காக உயிர்களைத் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரை நன்றிமறந்த வகையில் அமைந்துவிடும் என ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பது பற்றி நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இது, இராணுவத்தினரின் வெற்றியை மறுக்கும் செயற்பாடு” என அவர் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்-ஜெசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தமையை அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, 13வது திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக புதுடில்லியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
அதிகாரங்களைப் பகிர்ந்தால் அது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பாக அமைந்துவிடும் என அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
கிழக்கு மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றி ஆராய்வதற்கு அரசாங்கம் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்திருப்பதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க, “அவ்வாறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு அடுத்த திங்கட்கிழமை பதிலளிக்கப்படும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க பதிலளித்தார். தற்பொழுது பயங்கரவாதத்தை அழிப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply