சிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்கள்
கெலிகப்டர் சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுகின்றது. கீழ் காணும் பன்னிரெண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் யாழ் மேலாதிக்கத்தின் அரசியல் அதிகார நலன்களை பாதுகாத்துக் கொள்ளும் ஒர் கருவியாகவே தலித் சமூகமானது உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. போருக்கு முன் குடிமைகளாகவும், அடிமைகளாகவும், போருக்குப்பின் மாவீரர்களாகவும், தியாகிகளாகவும் என உபயோகப்படுத்தப்பட்ட சமூகம்.
“யாழ்ப்பாண நிலையத்திலிருந்து பளை போய்ச்சேரும் வரை ஆங்காங்கே நின்று கற்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக திட்டம். அதற்கு மேலும் பின்பு றெயில் ஓடுமாயின் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து அமுல் நடத்துவதாகவும் முடிவாயிற்று.
இதன்படி கல்வீச்சு ஆர்ப்பாட்டம் செய்ய ஆட்கள் வேண்டும். பல்லக்கர் இருநூறு பேர்கள் தருவதாக ஒப்புக்கொண்டார். வரணி இராசா நூறு, வேலுப்பிள்ளை நூறு இப்படி தலைக்கு நூறாக தங்கள் கம்பனிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்குகளையும் கணக்கெடுத்து, வழமையாக கோஜ் வண்டிக்கு ஆள் சேர்ப்பவர்களையும் கணக்கெடுத்து ஒவ்வொரு ஊரில் உள்ள சாதிமான்களையும் கண்க்கெடுத்துப் பார்த்தால் ஐந்தாயிரம் பேர்களையாவது திரட்டிவிடலாம் என்ற கணக்கினை ஆசைப் பிள்ளையார் கூறினார்.
பூரண திருப்தி. எப்படியும் றயிலைத் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை ஆசைப்பிள்ளையாருக்கு. குறிக்கப்பட்ட அந்த நாள் வந்தது. வேலுப்பிள்ளையார் வீட்டில் ஆரவாரமாக இருந்தது. கயிலாயப்பிள்ளையார் அங்குமிங்குமாக ஓடித்திரிந்து, பல இடங்களில் இருந்து வந்தவர்களை தனது வீட்டிலும் வேலுப்பிள்ளையார் வீடடிலுமாக தங்கவைத்துக் கொண்டும் தனது அடியார்களைக் கவனித்துக் கொண்டும் இருந்தார்.
தனது நால்சார் வீட்டுக்குஉள்ளே விடக்கூடியவர்களை உள்ளேயும், புதிதாகப் போடப்பட்டிருந்த சவக்கண்டிக்குள் இருக்கக்கூடியவர்களை அதற்குள்ளும், வெளித்தாவாரத்திலும் வளவுக் கிடுகுக் கொட்டிலுக்குள் விடக்கூடியவர்களைக் கொட்டகைக்குள்ளும் இனங்கண்டு தங்க வைப்பதில், அவியல் நடத்துவதில், குடிக்க வைப்பதில் அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
அவர்களுக்கு ஏற்ற விதங்களிலான ஏதனங்கள் : வாழைத்தடல், வாழை இலை, மண்சட்டி, வட்டில், சிரட்டை, உலைமூடி, குண்டுச் சட்டி, பித்தளைப் பேணி, சுரக்குடுவை இப்படி சாதிக் கேற்றபடி இனம் பிரித்து ஒவ்வொரு பிரிவினரும் மனம் கோணாதபடி பார்துக் கொள்ளவேண்டுமே. “
மேற்படி நிகழ்வை தோழர் கே. டானியல் அவர்கள் தனது ‘அடிமைகள் நாவலில் ‘ அம்பலப்படத்தியுள்ளார். றெயில் போக்குவரத்து ஆரம்பமானபோது அதற்கெதிராக போராட்டம் நடத்தினார்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். ”யாழ்ப்பாணத்தில் றயில் வர இருப்பதாகவும் அந்த றெயில் வந்துவிட்டால் சிறிசு பெரிசு என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் ஏற்றிப் பறக்கும் என்றும், பொதுவில் தேசவழமை அழிந்துவிடும்”
றெயிலின் வரவிற்கு எதிராக கல்லெறியும் போராட்டத்தை நடத்தியவர்கள் மேட்டுக்குடி உடமையாளர்கள். தலித் சமூகத்தவர்களைக் கொண்டே தமது கல்லெறியும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். கல்லெறியும் போராட்டத்திற்கு தலித்துக்களுக்கு மேட்டுக்குடியினர் எவ்வாறு ‘பயிற்சி கொடுத்தார்கள்’ என்பதைத்தான் தோழர். கே. டானியல் அவர்கள் தனது நாவலில் விபரித்துள்ளார். அது முன்னொரு காலம்.
பிற்பாடு தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் என்ற தமது நலன்களுக்காக பயிற்சி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தலித் சமூகத்தவர்களே. இவ்வாறு காலம் காலமாக ஏமாற்றப்பட்டும், பல்வேறு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் வாழ்ந்த அனுபவமே இன்று தமக்கான தலைமையையும், தமக்கான அரசியலையும் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே தலித் சமூகத்தவர்களும், தலித் சமூகம் மீதான அக்கறை கொண்டவர்களும் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முன்வந்த எமது வேட்பாளர்களை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்வதோடு, அவர்களது வெற்றிக்கான அனைத்து உதவிகளையும் நல்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
— இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
வேட்பாளர் பட்டியல்
1. திரு. யோசப் அன்ரனி
2. திரு. செல்லப்பா சதாநந்தன்
3. திரு.நடராசா தமிழ்அழகன்
4. திருமதி. உருத்திராதேவி சண்முகநாதன்
5. திரு. கந்தன் இராஜரட்ணம்
6. திரு. காந்தி அதிகாரம்
7. திரு. மாணிக்கம் பொன்னுத்துரை
8. திரு. தம்பியார் கந்தையா
9. திரு. வைரவன் மோகநாதன்
10. திரு. பிலிப் ஜோன்சுபாஸ்
11. திரு. குணசிங்கம் கோபிநாத்
12. திரு. சுப்பிரமணியம் மகேந்திரராஜா
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply