இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினர் மாந்தை மேற்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவுகளுக்கான நேரடி விஜயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் தலமையிலான ஆயர்களின் உயர்மட்டக்குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேசம் உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் விசேட செயலனியின் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையிலேயே இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் மேற்படி பிரதேசங்களுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு அப்பிரதேசங்களின் இயல்பு நிலை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவரும் கண்டி மறைமாவட்ட ஆயருமான கலாநிதி வின்னி வெர்ணான்டோ தலைமையிலான ஆயர் குழுவினர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு நேற்றையதினம் விஜயம் செய்து பின் அங்கிருந்து மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் உயிலங்குளம் ஊடாக தமது விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். வன்னி பிரதேசத்தின் மீது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா உள்ளிட்ட நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றவர்களின் அடிப்படை நலன்களையும் தேவைகளையும் மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை கத்தோலிக்க ஆயர் மன்றம் மேற்கொண்டிருக்கின்றது. விஜயத்தின்போது மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட பரப்பாங்கண்டல், ஆண்டாங்குளம், வட்டக்கண்டல், இலுப்பைக்கடவை, உள்ளிட்ட பல மீள் குடியேற்ற பகுதிகளையும் மீள் குடியேறியிருக்கும் மக்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதோடு மக்களுக்கான இறை ஆசீரையும் வழங்கி வருகின்றனர்.
இதன்போது போரின் காரணமாகப் பாதிப்படைந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது மீள்குடியேறியிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றியும் அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுபவை தொடர்பாகவும், கேட்டறிந்து வருகின்றனர். மேற்படி விஜயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர்நாயகம் ஆண்டகை, குருநாகல் ஆயர் கரல்ட் அன்ரனி பெரேரா, பதுளை ஆயர் வின்சன்ட் வெர்னாண்டோ, இரத்தினபுரி ஆயர் கிலிஸ்ரஸ் பெரேரா, சிலாபம் ஆயர் வெலைன்ஸ் மென்டிஸ், மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இதே வேளை கரிற்ராஸ் செடேக்கின் இலங்கைக்கான தேசிய இயக்குனர் அருட்தந்தை ஜோச் சிகாமணி, மக்கள் தொடர்பு பிரிவு அதிகாரி எஸ்.பி.அந்தோனிமுத்து, மன்னார் வாழ்வோதயம் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை பெப்பி சோசை, யாழ்மாவட்ட கியூடெக் இயக்குனர் அருட்தந்தை ஜேக்குமார் அடிகளார் மற்றும் செடேக்கின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் தேவேந்திரராசா ஆகியோர் ஆயர்கள் குழுவுடன் இணைந்திருக்கின்றனர்.
ஆயர்கள் குழுவின் விஜயத்தின்போது அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்ற உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், துவிச்சக்கர வண்டிகள், என்பன மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டுவருவதாக செடேக் அமைப்பின் மக்கள் தொடர்பு பிரிவு அதிகாரி எஸ்.பி.அந்தோனிமுத்து அங்கிருந்து தெரிவித்திருக்கின்றார்.அதே வேளை வன்னிப்பிராந்தியத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர்நடவடிக்கைகளின்போது அழிவடைந்த மற்றும் சேதத்திற்குள்ளாகிய வணக்க ஸ்தலங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்கள் என்பவற்றையும் ஆயர்கள் குழு பார்வையிட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார். இதனிடையே மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்குப் பிரதேசங்களைப்பார்வையிட்டிருக்கின்ற ஆயர் குழு இன்றும் நாளையும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான விஜயங்களை மேற்கொண்டு அப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டு தமது விஜயத்தினை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply