ஏ-9 பாதையூடாக பொருட்களை ஏற்றி இறக்க அறவிடும் கட்டணம் உடன் நீக்கம்

ஏ-9 பாதையூடாக தென் பகுதியிலிருந்து யாழ். குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டுவரும் போதும், யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களைத் தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி பொருட்களை ஏற்றி – இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் உடனடியாக நீக்கப் பட்டுள்ளது. இவ்வாறு கட்டணம் அறிவிடப்படுவது தொடர்பாக ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனை நீக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி ஆகியோருடனும் கலந்துரையாடினார். இதன் பயனாக பாதுகாப்பின் நிமித்தம் பொருட்களை ஏற்றி இறக்கவென அறவிடப்பட்ட கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு தொன் பொருட்களை ஏற்றி இறக்கவென ரூபா 4150.00 கட்டணமாக அறவிடப்பட்டது தெரிந்ததே.

இக்கட்டண அறவீடு காரணமாக யாழ். குடா நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் யாழ்ப்பாண உற்பத்திகளுக்கு தென் பகுதியில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும், இது விடயமாக யாழ். குடா நாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டதன் பலனாக யாழ். குடா நாட்டில் நியாய விலையில் சகல பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை நுகர்வோர் பெற்றிருப்பதாகவும் யாழ்ப்பாண உற்பத்திகளுக்குத் தென் பகுதியில் போட்டியின்றி சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் எவ்வித பாதிப்புகளுமின்றி பொருட்களைத் தாராளமாக யாழ். குடா நாட்டுக்கு எடுத்து வரக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply