சனல் 4 க்கு பொன்சேகா ரகசிய கடிதம்; பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் டலஸ்
இலங்கைக்கு எதிராகப் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்ட “சனல் – 4” தொலைக் காட்சியுடன் சரத்பொன்சேகா கொண்டுள்ள தொடர்பு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். தாம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமக்கு சுடுதண்ணீர் கூட இல்லையென்றும் சனல் – 4 இற்கு ரகசிய கடிதம் எழுதும் அளவுக்கு சரத் பொன்சேகா தொடர்பு வைத்திருந்தால், இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோவைத் தயாரிக்கும் பின்னணியிலும் அவர் செயற்பட்டிருப்பார் என்ற சந்தேகமும் எழுவதாக அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டி லேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘சனல் – 4’ என்பது புலிகளின் குரலின் ஆங்கில வடிவம் என்றே கருத வேண்டியுள்ளது. அவ்வாறான ஒரு தொலைக்காட்சிக்கு ரகசிய கடிதம் எழுதுகிறாரென்றால், இராணுவச் சட்டத்தையும் ஒழுங்கையும் அவர் எவ்வாறு பேணி இருப்பார் என்ற சந்தேகம் எழுகிறது. அந்தக் கடிதம் சோவியத் இலக்கியத்தின் வார்த்தைப் பிரயோகத்தில் காணப்படுகிறது.
உலகில் சிவில், யுத்த கைதியொருவர் சுடுதண்ணீரும், ஏ. சீ. அறையும் இல்லையென்று கூறி வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்கா வைத்துள்ள குவான்டனாமோ சிறைக் கைதிகள் கூட சித்திரவதை செய்யாது, விடுவியுங்கள் என்று தான் கேட்கிறார்கள். சில கைதிகள் தம் மனைவி, பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களான சந்தர்ப்பங்களும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. சரத் பொன்சேகாவுக்கு அரசு வழங்கிய சலுகைகளை அவர் நாட்டுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply