யாழ். குடாவில் 600 ஏக்கரில் தென்னை பயிர்ச் செய்கை
யாழ். குடாநாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 600 ஏக்கரில் தென்னை பயிரிடப்படவுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் பளையில் ஆரம்பமாகுமென அமைச்சர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று இலட்சம் தென்னங்கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த வருட இறுதிக்குள் இந்த 3 இலட்சம் தென்னங்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டுவிடும்.
இது தொடர்பான ஆரம்ப வைபவம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது. அமைச்சர் தி. மு. ஜயரட்ன இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். இதேவேளை யாழ் குடாநாட்டிலுள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை மீண்டும் அதிகார சபைக்குக் கையளிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. தென்னங்கன்றுகள் விநியோகத்தின் போது இடம்பெயர்ந்த 850 குடும்பங்களுக்கு மூவாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தி. மு. ஜயரட்ன மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அமைச்சர் வெற்றிலைக்கேணிப் பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட வுள்ளார். தென்னந்தோட்ட உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ள அமைச்சர், தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராய்வார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்திலும் அச்சுவேலியிலும் தென்னை நாற்று மேடைகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply