யுத்தம் நிறைவடைந்தாலும்; பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை தேர்தலின் பின்னரான மீள்பார்வை
நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலானது பலதரப்பினருக்கும் ஓர் வித்தியாசமான பாடத்தைப் புகட்டியுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் அரசாங்கத்தினருக்கு தமது வாக்குகளை வழங்காது எதிர்க்கட்சியினர்களுக்கு வழங்கியமையானது அரசின் மீது மக்களுக்கு இருந்துவந்த அதிருப்தியினை வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றது.
பெரும்பாலான சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், அவற்றின் பிரசாரமும் எதிர்பார்ப்பும் ஆட்சி மாற்றமாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மக்கள் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சிலரின் நடவடிக்கைகள் காரணமாக அதிருப்தி கொண்டிருந்தனர்.
அதாவது தமது தேவைகள் பலவற்றை ஆட்சியாளர்கள் புறக்கணித்ததோடு மட்டுமன்றி கண்டும் காணாதது போல பெரும்பான்மை இனத்திற்கு சார்பான முடிவுகளை எடுத்தமை, பொருட்களின் விலையேற்றம் மற்றும் யுத்த காலப்பகுதியில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் சொத்தழிப்புகள் என்பவற்றோடு இடம்பெயர்ந்த மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட நிலைமைகளையும் கூறலாம்.
இதனால் பலதரப்பினரும் ஆட்சி மாற்றத்தை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தினர். தேர்தல் காலங்களில் மாத்திரமே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த, அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் தொடர்பான பிரச்சினைகள் இவர்களது கவனத்தை ஈர்க்கின்றது. தேர்தல் நெருங்கும் போது அவசர அவசரமாக மக்களை மீள்குடியமர்த்தியும், துரிதமாக மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டும் பாதைகளைப் புணரமைத்து பாவனைக்கு அனுமதித்தும் வந்தனர்.
குறிப்பாக யு9 வீதி எனப்படுகின்ற யாழ்ப்பாணம்-கண்டி வீதி மக்களின் பாவனைக்காக 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முன்பு பாதுகாப்புக் காரணம் கூறப்பட்டு யு9 வீதி காலவரை நிர்ணயிக்கப்பட்டு பின் திறக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இவை மட்டுமன்றி வடக்குப் பிரதேசத்தில் குறிப்பாக வன்னிப்பகுதியில் சிறுவர் போராளிகள் தொடக்கம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் போன்றோர் தேர்தல் காலங்களில் பொது மன்னிப்பின் பேரிலும் நிபந்தனையுடனும் நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட்டனர்.
இதனோடு வடக்குப் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் செயற்பாடுகளில் ஒன்றாக வடக்கின் வசந்தம் போன்றனவும் மக்களின் நலன்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக பல கட்சியாளர்கள் சார்பான ஆட்சியாளர்கள் கூறிக் கொள்கின்ற போதும் வடக்குப் பிரதேச மக்கள் மட்டுமன்றி கிழக்குப் பிரதேசம் வாழ் தமிழ், முஸ்லீம் மக்களும் மற்றும் குறிப்பிட்ட மலையக மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை சிந்திக்க வேண்டிய ஒன்றாகவே உள்ளது.
போரின் வெற்றிக் கோசங்கள் தென்பகுதி மக்களைத் திணறடித்துக் கொண்டிருக்கும் போதும் சில இடங்களில் எதிர்கட்சியினர் தமது ஆதரவைப் பெற்றுள்ளனர். வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை மக்கள் அனுபவித்த பாரிய உயிரழிவுகள் மற்றும் சொத்தழிவுகள் காரணமாகவும் மீள் குடியேற்றம் என்ற பெயரில் மீண்டும் அவர்கள் எதிர்கொள்கின்ற முகாம் வாழ்க்கை போன்றவற்றோடு எவ்வித அடிப்படை வசதிகள் இன்றியும் பாதுகாப்பின்றியும் வெட்டவெளிகளில் மற்றும் வனப்பகுதிகளில் கூடாரங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளவர்கள் அரசிற்கெதிராகவோ அல்லது எவருக்குமோ வாக்களிக்காது இருந்தமை வியப்பான ஒன்றல்ல.
இருப்பினும் யாழ்குடா நாட்டைப் பொறுத்தவரை அப்பகுதியில் தமது செல்வாக்கைப் பரவவிட்டுள்ள அரசாங்கம் சார்ந்த தமிழ்க் கட்சியின் தோல்வியும் இங்கு கவனிக்கத்தக்கது. ஏனெனில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை யாழ் மக்களின் வாக்குகள் எதிரணிக்கு வழங்கப்பட்டமைக்கும் அரசாங்கத்திற்கு வழங்கப்படாமைக்கும் மற்றும் புறக்கணிக்கப்பட்டமைக்கும் குறிப்பிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளும் ஓர் காரணமாகும்.
நடந்து முடிந்த யுத்தத்தில் தமிழ் மக்களது தரப்பில் ஏற்பட்ட பாரிய உயிரழிவுகள் மற்றும் அவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட கட்சி சார்பானவர்கள் எவ்வித எதிர்ப்பும் இன்றி வன்னிப் பகுதி வாழ்மக்களை பழிதீர்க்கும் வகையில் செயற்படுவது போல பாராமுகமாகவும் அரசாங்கத்தின் யுத்தம் தொடர்பான பிரச்சாரங்களுக்கு நாடு நாடாகத் தாமும் சென்று பிரச்சாரம் செய்தமையும் இத்தேர்தலில் குறிப்பிட்ட கட்சியை தமிழ் மக்கள் புறக்கணிப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
இதன்மூலம் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை இன்னமும் அவர்கள் மறக்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகக் கொள்ளலாம். ஏனெனில் குறிப்பிட்ட கட்சியின் ஆதிக்கத்துள் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும், அவர்கள் தமது மொழி சார்பானவர்களாக இருக்கும் பட்சத்தில் கூட தமது வாக்குகளை எதிரணிக்குச் சார்பானதாக வழங்கியமையானது வடக்குப் பிரதேச மக்கள் அரசாங்கத்தின் மீதும் குறிப்பிட்ட தமிழ் அரசியற் கட்சியின் மீதும் கொண்ட நம்பிக்கையின்மையை இது காட்டுகின்றது.
இவற்றிலிருந்து இனியும் இனத்துவம் மற்றும் யுத்த வெற்றிக் களிப்பு, தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மனிதாபிமானப்பணிகள் என்ற திடீர் உபசாரங்களை சிறுபான்மை மக்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பதனை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் புரிய வைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
முடிவடைந்து விட்ட தேர்தலின், தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற ஓரிரு முக்கியமான விடயங்களினைப் பார்த்தால் அதில் ஒன்று ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் கைதும் விசாரனைகளும். அதனைத் தொடர்ந்து அவரது பாரியார் வெளியிடுகின்ற கருத்துகளில், தனக்கும் தனது கணவருக்கும் இந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பின்மை பற்றிக் கூறி வருகிறார்.
அவருக்கு ஆதரவாகச் சிங்களப் பெண்கள் போதி பூஜை வழிபாடு நிகழ்த்தி இறைவனை மன்றாடுகின்றனர். அத்தோடு தனது கணவனின் கைது குறித்தும் அவரது உடல் நிலைமை பற்றியும் மிகவும் வேதனையுடன் குறிப்பிடுகின்ற திருமதி அனோமா அவர்கள் மனைவி என்ற நிலையில் இருந்து தனது கணவரை விடுவிப்பதற்காக போராடி வருகிறார். இதே நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக பல நூறு தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் தமது கணவன்மார்களை, தமது மகன்களை தொலைத்து விட்டு உயிரோடு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்று கூட தெரியாமல் நடைபிணங்களாக அலைகின்றார்கள்.
இவர்கள் நாளாந்தம் மனித உரிமைகள் காரியாலயங்களில் முறையிடுவதும் காணாமல் போனோர் பற்றி விசாரணை நடத்தும் மற்றும் விசாரணைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் போன்றோர்களிடம் கதறி அழுதும் பலனின்றி எத்தனையோ பெண்கள் இன்றுவரை அவல வாழ்க்கை வாழ்கின்றனர். அத்துடன் எத்தனையோ கோவில்களில் கையேந்தியும், சட்டங்களை அமுல்படுத்துபவர்களிடம் மன்றாடியும் நிற்கின்றார்கள். இவ்வாறான பெண்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் பொருளாதார வருமானம் என்பன பாதிக்கப்பட்டதோடு தனித்து விடப்பட்ட கொடுமையான துன்பத்தை அனுபவிக்கும்; இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுடன், உறவுகளைத் தொலைத்த சிறுவர் சிறுமிகளும் இதனுள் அடங்குகின்றனர்.
இவர்களில் பலர் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு வெளி இடங்களையே அறியாத பாமரப் பெண்களாவர். தமது முறையீட்டை எங்கு போய் முறையிடுவது மற்றும் யாருக்கு முறையிடுவது என்று தெரியாது பணம் பறிக்கும் நபர்களிடம் சிக்கிக் கொள்வோரும் உள்ளனர். வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற காணாமல் போனோர்களின் உறவினர்கள், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் எதிர் கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை மொழிப் பிரச்சினையாகும். சிங்களம் மற்றும் ஆங்கில மொழியினைப் பேச முடியாத சூழலில் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும், தமது முறையீட்டை ஒழுங்காகப் பதிவு செய்ய முடியாத சிக்கல் நிலையை எதிர்கொண்டும் எத்தனையோ பெண்கள் உரிய தீர்வின்றி அலைக்கழிந்து கொண்டிருக்கின்றனர்.
சமூக அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு உட்பட்டு உறவுகளைத் தொலைத்து உயிர்களைப் பறி கொடுத்து விதவைகளாக உருவாகியுள்ள பெண்கள் சமூகம் பற்றி யாருமே கணக்கில் எடுப்பதில்லை. பெண்களுக்கு அழிக்கப்படாத உரிமைகளில் தற்போது பேச்சுரிமை மட்டுமன்றி உறவுகளோடும் குடும்பத்தோடும் இணைந்து வாழ்கின்ற சுதந்திரம் கூடப் பறிக்கப்பட்டு விட்டது.
கணவரைத்தேடிச் செல்லும் பெண்கள்; தனது பிள்ளைகளுக்கு சரியான பராமரிப்பை வழங்கமுடியாமலும், எதிர்நோக்கும் ஏமாற்றங்களினால் பாரிய அளவில் உள ரீதியாக பாதிக்கப்பட்டு தமது கணவரின் வருகையின் அக்கறையுடனே காலத்தை கழிக்கின்றார்கள். அதனைவிடக் கொடுமை என்னவென்றால் பல வருடங்கள் ஆகியும் எந்தத் தகவலும் கிடைக்காத போதும் தமது உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டு எத்தனையோ பெண்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருவதும் கண்கூடு.
பெண்களின் உயிர் மற்றும் அவர்களது உணர்வுகள் பெறுமதி அற்றுப் போனவைகளாகவே இன்றைய சமூகத்தில் காணப்படுகின்றது. அதிகமாக கடத்தல்களும், கொலைகளும் இனம் தெரியாத நபர்களால் ஆண்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டாலும் அந்த நடவடிக்கையின் பின்விளைவும் இறுதியில் பெண்களையே சென்று பாதிக்கின்றது. அந்த வரிசையில் வைத்துப் பார்க்கும்போது திருமதி பொன்சேகா அவர்களின் குரலும் இன்று பெண்களுக்கெதிராக நிகழ்கின்ற வன்முறைகளின் அடிப்படையில் வைத்து நோக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த படித்த மற்றும் இன்னொரு நாட்டின் குடியுரிமை கொண்டதோடு மட்டுமன்றி இந்த நாட்டின் இராணுவத்துறைத் தலைமைப்பதவி வகித்தவரின் மணைவிக்கே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால், யுத்தப்பகுதியில் மாட்டிக் கொண்ட அப்பாவி ஆண்கள் மற்றும் பிள்ளைகளின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் யார் பொறுப்புக் கூறுவார்கள்? இன்று அனோமா பொன்சேகா அவர்களுக்கு ஆதரவாக வழிபாடு செயது வரும் பெரும்பான்மை இனத்துப் பெண்கள் போன்றுதான் கடந்த பல ஆண்டுகளாக எமது தழிழ் பேசும் பெண்களும் அனுபவித்து வருகின்றார்கள் என்ற யதார்த்த உண்மையை இன்றைய காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்ட நுணுக்கம் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்களினாலேயே தமக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளைத் தவிர்க்க முடியாது இருக்கும் போது அப்பாவிக் கிராமத்துப் பெண்கள் தமது பிரச்சினைகளை எங்கு போய் முறையிடுவார்கள்? பறிகொடுத்த உயிர்களிற்கான நியாயத்தை எங்கு போய்க் கேட்பார்கள்? யுத்தம் தவிர வடக்கு கிழக்கில் காணாமல் போயும் கடத்தப்பட்டு அரசியல் மற்றும் பணத்திற்காக எத்தனை ஆண்கள் கொலை செய்யப்பட்டு உடல் வீசியெறியப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்கள்? இவை மட்டுமன்றி சிவராம், லசந்த விக்கிரமசிங்க மற்றும் நிமல்ராஜன் போன்ற ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக பேராசிரியர் இவீந்திரநாத் போன்று எத்தனையோ பெறுமதியானவர்கள் இன்று சமூகத்தில் இல்லாமலேயே போய்விட்டனர்.
இந்த வரிசையில் பிரபலமற்று எண்ணிக்கையின் அடிப்படையில் காணாமல் போயுள்ளோர் வரிசையில் எத்தனையோ அறிமுகமில்லாத நபர்கள் உயிருடன் இல்லாமல் போயுள்ளனர். இவற்றின் பின்னால் இருந்து பாதிக்கப்படுவதும் அல்லல்படுவதும் பெண்கள் மட்டுமே. இதனை ஏனோ எவருமே கண்டு கொள்வதில்லை. எமது நாட்டைப் பொறுத்தவரை பெண்களின் உரிமைகளும், அவர்களது தேவைகளும் பெறுமதி அற்றவைகளாகவே உள்ளது.
அரசியல் தலைமைத்துவம் தொடக்கம் சமூக மட்டங்கள் வரையிலும் தங்களது பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி செய்யப்படுகின்ற வன்முறைகள் அனைத்தும் பெண்களையே பாதிக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து விட்டபோதும் கூட பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை.
தற்போது யுத்தம் முடிவுற்றதாக கருத்தப்பட்டாலும், நாட்டில் சட்டம் வலுவிழந்து, நியாயமான தீர்வின்றி ஆயுதக்குழுக்களின் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தொலைந்து போன உறவுகள் மட்டுமன்றி, தமது எதிர்கால வாழ்க்கை கூட கேள்விக்குள்ளாகிய நிலையில் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவனைத் தேடி முறைப்பாடு செய்யச் சென்ற வேளையில் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறித்தான் இருக்கின்றது.
சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களும், நியாயங்களை கூறுபவர்களும் இன்று வன்முறைகளைத் தோற்றுவிப்பவர்களாக நடமாடிக் கொண்டிருப்பதனால் பெண்களின் வாழ்தலுக்கான சுதந்திரம் கூட மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம், சகவாழ்வு, சம உரிமை எனப் பலவாறாக பேசிக் கொள்கின்ற போதும் அமுலில் இருப்பது என்னவோ மறைமுக ஆயுத கலாச்சாரமும், அதிகார துஸ்பிரயோகமும், வன்முறையும், ஊழலும் மட்டுமே என்பது நாளாந்தம் பாதிக்கப்படுபவர்களைத் தவிர எத்தனைப்பேருக்குத் தெரியும்.
துருவ மங்கையர்
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply