முரண்பாடுகளை பேசித்தீர்ப்பதை தவிர்த்து பகமையை வளர்க்கும் வழிமுறையில் இறங்குவது ஐக்கியத்திற்கு பாதகமான செயலாகும்: ஈ.பி.டி.பி
எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்விற்கான பாதையில் மாற்று ஐனநாயக கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென வெவ்வேறு அரசியல் கோட்பாடுகளையும், வழிமுறைகளையும் வகுத்து செயலாற்றி வருவது தெரிந்த விடயம்.
ஐனநாயக அரசியல் தளத்தில் செயற்பட்டு வருகின்ற கட்சிகளின் மத்தியில் அரசியல் கோட்பாடு, மற்றும் நடைமுறை சார்ந்த விடயங்களில் முரண்பாடுகள் தோன்றுவதும்
மறைவதும், பேசித்தீர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாத யதார்த்த நிலையாகும்.
இந்நிலையில், நேற்றைய தினம் பிற்பகல் (05.12.2008) வவுனியா நகரில் கட்சிப்பணியில் ஈடுபட்டிருந்த எமது தோழர் ஒருவரை சக அமைப்பான தமிழீழ மக்கள் விடுதலைக்கழகமாகிய புளொட் அமைப்பினர் வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றிருந்தனர். இதையடுத்து எமது வவுனியா மாவட்ட அமைப்பாளர் உரிய முறையில் அணுகி முன்னெடுத்த முயற்சியினால் கடத்தி செல்லப்பட்ட எமது தோழர் உடனடியாகவே விடுவிக்கப்பட்டிருந்தார்.
கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் உருவாகும் முரண்பாடுகளை உரிய முறையில் கட்சியின் தலைமையோடு தொடர்பு கொண்டு பேசித்தீர்ப்பதே நீடித்த ஐக்கியத்திற்கு வழி வகுக்கும். இந்த வழி முறையை தவிர்த்து மாற்று வழிமுறையில் இறங்குவது பகமையை வளர்க்கும் செயலாகவே கருதப்படும்.
முரண்பாடுகளை பேசித்தீர்க்கும் வழிமுறையை மறந்து செயற்பட்டதால் அண்மையில் வவுனியாவில் வைத்து எமது சகோதர அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமான சிறீ ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அவர்களது அலுவலகத்துக்குள் உள்நுழைந்த புளொட் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
ரெலோ சிறீ அமைப்பின் உறுப்பினர்கள் மீதான படுகொலை சம்பவத்தை எம் மீது திசை திருப்பி அந்த அமைப்பிற்கும் எமக்கும் இடையிலான பகமையை வளர்ப்பதற்கான முயற்சியும் அந்த சம்பவத்தில் காயமடைந்த உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், நாம் பகமையை வளர்க்க விருப்பமின்றி பொது நோக்கில் இது குறித்த எந்த விடயத்தையும் பகிரங்கப்படுத்துவதை தவிர்த்திருக்கின்றோம். இது குறித்த முழுமையான விபரங்களை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவும் இல்லை.
கடந்த காலங்களில் சக அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள் பேசித்தீர்ப்பதற்கு பதிலாக படுகொலைகளாகவும், இரத்தப்பலிகளாகவும் நடந்து முடிந்திருக்கின்றன. இதனால் எமது மக்களில் அரசியல் உரிமைகளுக்கான முயற்சிகள் யாவும் திசைதிருப்பப்பட்டு சகோதர சண்டைகளின் களமாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தளம் மாறியிருந்தது. இதை கருத்தில் எடுத்து, நேற்றைய தினம் வவுனியாவில் எமது தோழர் கடத்தப்பட்ட சம்பவமும் சகோதர சண்டையாக மாறிவிடக்கூடாது என்ற உயரிய நோக்கில் இந்த விடயத்தை நாம் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.
ஈழமக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply