இறைமைக்கு எதிராகச் செயற்பட்டனர்: தமிழ் பா.உ.களுக்கு நீதிமன்ற அழைப்பாணை
இலங்கையின் இறைமைக்கு எதிராகக் கருத்துவெளியிட்டமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன் ஆகியோருக்கும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா கஜேந்திரனுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளது.
2006 ஜுன் 28இல் ஜேர்மனில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் இவர்கள் மூவரும் ஆற்றிய உரையில் இலங்கையின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை வெளியிட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து நீதிமன்றத்தினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு தனிநாட்டை அமைப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவிசெய்யவேண்டும் என்று இவர்கள் தமது உரையில் கூறியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த உரையின் பதிவுகளை ஜேர்மனியிலுள்ள புலம்பெயர் இலங்கையர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், இந்த உரை தம்முடையதை ஒத்தது என்பதை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் விசாரணையின்போது ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும்போது, பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்ற இலங்கையின் அரசியலமைப்பின் 6வது திருத்தச்சட்டத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டு சத்தியப்பிராணம் செய்திருப்பதாகவும், இதற்கு எதிராக இந்த உரை அமைந்திருப்பதாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகருக்கும், சட்டமா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் இந்தக் குற்றச்சாட்டை விசாரித்த கொழும்பு மாவட்ட பிரதம நீதிபதி, டிசம்பர் 10ம் திகதி நீதிமன்றுக்கு சமுகம் தருமாறு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply